சாவில் மர்மம் நீடிப்பு: இந்தோனேஷிய பெண்ணின் உடலை கணவரிடம் ஒப்படைக்க போலீசார் மறுப்பு

இந்தோனேஷிய பெண் சாவில் மர்மம் நீடிக்கும் நிலையில், உடலை கணவரிடம் ஒப்படைக்க போலீசார் மறுத்து விட்டனர்.

Update: 2017-09-07 23:15 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள பொன்மனையை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 31), என்ஜினீயர். இவர் கடந்த 2013–ம் ஆண்டு வேலை தொடர்பாக இந்தோனேஷிய நாட்டுக்கு சென்றார். அப்போது சுபாசுக்கும், அந்த நாட்டை சேர்ந்த பெர்தாமியா வர்தாநியா (25) என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து காதலருடன் அந்த பெண் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். இருவீட்டாரின் சம்மதத்துடன் அவர்களுக்கு குலசேகரத்தில் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகு இருவரும் இந்தோனேஷியாவில் வசித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சுபாஷ் மட்டும் தனியாக சொந்த ஊருக்கு திரும்பி விட்டார். இதைத்தொடர்ந்து பெர்தாமியா கடந்த சில நாட்களுக்கு முன் கணவரின் வீட்டுக்கு வந்தார். சிறிது நாட்கள் சேர்ந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் பெர்தாமியா மர்மமான முறையில் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுபற்றிய தகவல் அறிந்த குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். பெர்தாமியா சாவில் மர்மம் நீடிப்பதால் அவருடைய சகோதரியிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரியிடம் கேட்டபோது, ‘சுபாசும், பெர்தாமியாவும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். திருமணமாகி சில மாதங்கள் இருவரும் இந்தோனேஷியாவில் வசித்தனர். அப்போது தன் மனைவியின் நடத்தை மீது சுபாசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது பெர்தாமியாவின் பெற்றோர் சுபாசிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதில் அவருக்கு உடன்பாடு ஏற்பாடாததால், திடீரென சொந்த ஊருக்கு வந்துவிட்டார். பெர்தாமியா பல முறை செல்போனில் தொடர்புகொண்ட போதும் சுபாஷ் பேச மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் கணவனை பார்ப்பதற்காக பெர்தாமியா பொன்மனையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்துள்ளார். ஒரே வீட்டில் தங்கியிருந்தாலும் மனைவியிடம் சுபாஷ் பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக மனவேதனையடைந்த பெர்தாமியா தூக்கிட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் இறந்து போன பெர்தாமியாவின் குடும்பத்தினர் இன்னும் இங்கு வராததால் சரியான காரணங்கள் தெரியாமல் உள்ளது.

இந்தோனேஷியா நாட்டில் இருந்து பெர்தாமியா சகோதரி ஒருவர் வந்துகொண்டு இருக்கிறார். அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. அதன்பிறகு தான் கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது உண்மைதானா? கணவரை பார்ப்பதற்காகத்தான் சுபாஷின் வீட்டுக்கு பெர்தாமியா வந்தாரா? என்பதெல்லாம் தெரியவரும்‘ என்றார்.

மரணமடைந்த பெர்தாமியா உடல் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடலை வாங்கிச் செல்வதற்காக அவருடை கணவர் மற்றும் உறவினர்கள் கூடியிருந்தனர். ஆனால் அவர்களிடம் பெர்தாமியாவின் உடலை ஒப்படைக்க போலீசார் மறுத்து விட்டனர். பெர்தாமியாவின் சகோதரி வந்த பிறகுதான் உடல் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசு£ர் சுபாஷிடம் விசாரணை நடத்தினர்.

சுபாசுக்கும், பெர்தாமியாவுக்கும் திருமணம் நடந்து ஒரு ஆண்டே ஆவதால் இந்த வழக்கு தொடர்பாக நாகர்கோவில் கோட்டாட்சியர் ஜானகி விசாரணை நடத்தி வருகிறார். அவர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்து பெர்தாமியாவின் உடலை பார்த்து சென்றார்.

என்ஜினீயரான சுபாஷ் டெல்லியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது வேலை தொடர்பாக கடந்த 2013–ம் ஆண்டு இந்தோனேஷியா நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு சென்றார். அந்த நிறுவனத்தில் பெர்தாமியா வேலை பார்த்து வந்துள்ளார். பெர்தாமியா பள்ளி படிப்பு முடித்திருந்தார். மேற்கொண்டு படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஒரே நிறுவனத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதால் அவர்கள் இடையே பழக்கம் ஏற்பட்டது.

மேலும் சுபாசுக்கு முதலில் இந்தோனேஷிய மொழி தெரியவில்லை. ஆங்கிலத்திலேயே இருவரும் பேசிக்கொண்டனர். இப்படியே சில மாதங்கள் சென்ற பிறகு இருவரும் காதலிக்க தொடங்கினர். இந்தோனேஷியாவில் 6 மாதங்கள் இருந்த பின்னர் சுபாஷ் மீண்டும் நாடு திரும்பினார்.

அதன்பிறகு இருவரும் செல்போன் மூலம் தங்கள் காதலை வளர்த்துக்கொண்டனர். சுபாஷ் திரும்பவும் தன் காதலியை பார்ப்பதற்காக இந்தோனேஷியா சென்றார். 2 ஆண்டுகள் காதலித்த நிலையில் கடந்த 2015–ம் ஆண்டு இந்தோனேஷியாவில் உள்ள பெர்தாமியா வீட்டில் அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதைத் தொடர்ந்து 2016–ம் ஆண்டு குலசேகரத்தில் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

சுபாசும், பெர்தாமியாவும் திருமணத்துக்கு பிறகு இந்தோனேஷியா சென்று குடியேறினர். பெர்தாமியா, வேறு ஒரு வாலிபருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதாகவும், அந்த புகைப்படங்களை சுபாஷ் பார்த்ததாகவும் தெரிகிறது. அதன் பிறகு தான் தன் மனைவி மீது சுபாசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மனைவியுடன் தகராறு செய்துகொண்டு சுபாஷ் பொன்மனையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்துள்ளார்.

மேலும் செய்திகள்