பெண் பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவு

பெண் பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டு இருப்பதாக சித்தராமையா அறிவித்து உள்ளார்.

Update: 2017-09-06 23:58 GMT

பெங்களூரு,

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ் (வயது 55). ‘லங்கேஷ் பத்திரிகே‘ என்ற வாரப்பத்திரிகையை நடத்தி வந்தார். அதன் ஆசிரியராகவும் அவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெளியே காரில் சென்றுவிட்டு தனது வீட்டுக்கு வந்தார். அப்போது அவரை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர்.

முற்போக்கு சிந்தனையாளரான இவர், மதவாத கொள்கைகளை தீவிரமாக எதிர்த்து வந்தார். இந்த நிலையில் அவரை மர்மநபர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் பற்றி முதல்–மந்திரி சித்தராமையா, போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி, டி.ஜி.பி. ஆர்.கே.தத்தா, நகர போலீஸ் கமி‌ஷனர் சுனில்குமார் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை அவசரமாக ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டம் முடிந்த பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டது குறித்து இன்று (அதாவது நேற்று) காலை போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் நான் ஆலோசனை நடத்தினேன். இந்த சம்பவத்தை மாநில அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. அதனால் இதுபற்றி விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணை குழு (எஸ்.ஐ.டி.) அமைத்து உத்தரவிட்டுள்ளேன். ஐ.ஜி. அளவிலான அதிகாரி இந்த குழுவுக்கு தலைமை வகிப்பார். இந்த குழுவுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். தேவையான போலீஸ் அதிகாரிகளை தேர்ந்து எடுத்துக்கொள்ள அதன் தலைவருக்கு முழு அதிகாரம் வழங்கியுள்ளேன்.

நேற்று முன்தினம் இரவு கவுரி லங்கேஷ் காரில் வெளியே சென்றுவிட்டு இரவு 8 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் காரில் இருந்து இறங்கி வீட்டின் நுழைவு வாயில் கதவை திறந்துள்ளார். ஒரு கதவை திறந்துவிட்டு திரும்பியபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில் ஒருவர் துப்பாக்கியால் அவரை மிக அருகில் இருந்தபடி சுட்டுள்ளார்.

உடனே அவர் அடுத்த சில அடிகள் எடுத்து வைத்து சரிந்து விழுந்துள்ளார். அங்கேயே அவரது உயிர் பிரிந்தது. இது தான் அவருடைய இறுதி நிலை விவரங்கள். ஆனால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஒருவரா? அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களா? என்பது தெரியவில்லை. மேலும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் பற்றி எதுவும் தெரியவில்லை.

கவுரி லங்கேஷ் மரணம் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் எனக்கு தோழியாக இருந்தார். அவருடைய தந்தை காலத்தில் இருந்தும் கவுரி லங்கேஷ் எனக்கு நன்றாக அறிமுகம் ஆனவர் ஆவார். என்னை அவர் பல முறை சந்தித்து பேசி இருக்கிறார். ஆனால் எப்போதும் தனக்கு மிரட்டல் இருக்கிறது என்பது பற்றி எந்த தகவலும் அவர் என்னிடம் கூறவில்லை.

கவுரி லங்கேஷ் வீட்டில் 4 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அதை போலீசார் எடுத்து சோதனை செய்து பார்த்தனர். ஒரு கேமராவில் கவுரி லங்கேசை மர்ம நபர் துப்பாக்கியால் சுடும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகளை நானும் பார்த்தேன். இது தொடர்பாக மேலும் சில ஆதாரங்கள், துப்பு கிடைத்துள்ளன.

இதுபற்றி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். கொலையாளிகளை விரைவாக செயல்பட்டு கைது செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கவுரி லங்கேஷ் என்னை நேரில் சந்தித்தார். அப்போது தீபாவளி மலர் வெளியிட உள்ளதாக என்னிடம் அவர் கூறினார். அப்போது கூட அவர் மிரட்டல் இருப்பது பற்றி என்னிடம் கூறவில்லை.

இனிமேல் கர்நாடகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்றும், அதனால் முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படியும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். சமூக வலைதளங்களில் அவர்களுக்கு ஏதாவது மிரட்டல் வருகிறதா? என்பது குறித்து கண்காணிக்கும்படியும் போலீசாருக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்.

கவுரி லங்கேஷ் கொலையை கொண்டாடும் விதமாக முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். மராட்டிய மாநிலத்தில் முற்போக்கு சிந்தனையாளர்கள் நரேந்திர தாபோல்கர், பன்சாரே ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். அதே போல் தார்வாரில் எழுத்தாளர் எம்.எம்.கலபுரகி கொலை செய்யப்பட்டார். இந்த மூன்று சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அதாவது துப்பாக்கி குண்டுகள் ஒரே மாதிரியானவை என்று தடய அறிவியல் சோதனையில் கண்டறியப்பட்டது.

ஆனால் இந்த சம்பவங்களுக்கும், கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கும் தொடர்பு உள்ளதா? என்பது தெரியவில்லை. போலீஸ் விசாரணையில் தான் உண்மை என்ன? என்பது தெரியவரும். இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுமாறு கவுரி லங்கேசின் சகோதரர் முறையிட்டுள்ளார். நாங்கள் எந்த விசாரணைக்கும் திறந்த மனதுடன் உள்ளோம்.

எம்.எம்.கலபுரகி கொலையில் குற்றவாளிகளை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகளுடன் சி.ஐ.டி. போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இப்போது நாங்கள் கவுரி லங்கேஷ் கொலை பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளோம். இந்த குழு முதலில் விசாரணை நடத்தட்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்