கல்பாக்கம் அணு மின் நிலைய விஞ்ஞானியின் மகள், மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து சாவு

கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானியின் மகள், மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். திருமணமான 3 மாதத்தில் அவருக்கு இந்த சோகம் நேர்ந்து விட்டது.

Update: 2017-09-06 23:19 GMT

கல்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் அணுமின்நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருபவர் சிவசுப்பிரமணியன். இவர், கல்பாக்கம் அடுத்த அணுபுரம் கிராமத்தில் உள்ள அணுசக்தி துறை ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இவருடைய மகள் நிரோஜா (வயது 25). இவருக்கும், சென்னையை சேர்ந்த ராஜாராமன் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நிரோஜா, தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் உள்ள மாடியில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே இறங்கி வந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக நிரோஜா மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஊழியர் குடியிருப்பில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், நிரோஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சதுரங்கப்பட்டினம் போலீசார், நிரோஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். நிரோஜாவுக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் இதுபற்றி செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்