அம்மா ஆரோக்கிய திட்டத்தில் 2 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்

வேலூர் மாவட்டத்தில் அம்மா ஆரோக்கிய திட்டத்தில் 2 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

Update: 2017-09-06 23:07 GMT

வேலூர்,

இதுகுறித்து கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

உடல் ஆரோக்கியத்தை கண்டறிய முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளும் பொருட்டு 2016 மார்ச் மாதம் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் 20 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்தத் திட்டம் ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆற்காடு, ராணிப்பேட்டை, அலமேலுமங்காபுரம், சத்துவாச்சாரி ஆகிய 4 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4.3.2016 முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் 3016 முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது.

இந்தத் திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் 83 ஆயிரத்து 654 ஆண்கள், 1 லட்சத்து 22 ஆயிரத்து 621 பெண்கள் என மொத்தம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 275 பேர் பயன் அடைந்துள்ளனர்.

அதில் 10 ஆயிரத்து 133 பேருக்கு உயர் ரத்த அழுத்தம், 4 ஆயிரத்து 394 பேருக்கு சர்க்கரை நோய், 213 பேருக்கு இதய நோய், 2 ஆயிரத்து 343 பேருக்கு கண் பார்வை குறைபாடுகள், 37 பெண்களுக்கு மார்பக புற்று நோய் எனப் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். 3 ஆயிரத்து 112 பேர் மேல்சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்