நீல திமிங்கல விளையாட்டு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

நீல திமிங்கல விளையாட்டின் பாதிப்பு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2017-09-07 00:00 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி கூட்டுறவு ஒன்றிய கருத்தரங்க கூடத்தில் நீல திமிங்கல விளையாட்டு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

நீல திமிங்கல விளையாட்டு மிகவும் ஆபத்தானது. இந்த விளையாட்டை இணைய தளத்தில் சென்று பார்த்தால், அவர்கள் கொடுக்கும் கட்டளைகள் எல்லாம் ஆபத்து நிறைந்ததாக உள்ளன. அதாவது, மொட்டை மாடியில் ஒற்றை காலில் நின்று செல்பி எடுத்து அனுப்பமாறு கூறுகிறார்கள். ஒரு காலில் நிற்கிறவர்கள் கீழே விழத்தான் செய்வார்கள். அதுமட்டுமல்லாமல், ஓடும் ரெயில் முன் பாய்ந்து செல்பி எடுத்து அனுப்புமாறு கூறுகின்றனர். அதையும் சிலர் செய்துள்ளனர்.

இந்த விளையாட்டில் 50 நாளுக்கு 50 கட்டளைகள் கொடுக்கப்படுகிறது. தனியாக இருப்பவர்கள், மனக்குழப்பத்தில் இருப்பவர்கள், குடும்பத்தில் பிரச்சினை உள்ளவர்கள் இதில் மூழ்கிவிட்டால் வெளியே வரமுடியாத நிலை உள்ளது. நீல திமிங்கல விளையாட்டு தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஆசிரியர்கள் மூலம் ஏற்படுத்தினால் நல்ல பலனைத் தரும். மாணவர்களிடம் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் ஆசிரியர்கள் அதனை கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா கலந்து கொண்டு நீல திமிங்கல விளையாட்டின் ஆபத்து குறித்தும், அதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களை கண்டறிவது குறித்தும் செயல்விளக்கம் அளித்தார். இதில் கல்வித்துறை செயலர் நரேந்திரகுமார், போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், பள்ளி கல்வி இயக்குனர் குமார், இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் மற்றும் பள்ளி, கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

நீல திமிங்கல விளையாட்டை தடை செய்யக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன் நாராயணசாமி பேட்டி

கூட்டத்தில் முடிவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நீல திமிங்கல விளையாட்டின் தாக்கம் 13 வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. புதுச்சேரியில் இது தடுக்கப்பட வேண்டும். பெற்றோர் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும்.

நீல திமிங்கல விளையாட்டை தடை செய்ய நானும், போலீஸ் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதமும் மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளோம். குறிப்பாக நீல திமிங்கல செயலியை தடை செய்ய வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறைக்கு தெரிவிக்க உள்ளோம். புதுச்சேரியில் உள்ள இன்டர்நெட் சென்டர்களுக்கும் இது தொடர்பாக அறிவுறுத்த உள்ளோம்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்