ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா

திம்மணமுத்தூர் ஊராட்சி செயலாளரை மாற்றியதை கண்டித்து திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-06 23:05 GMT

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் தாலுகா திம்மணமுத்தூர் ஊராட்சி செயலாளராக சக்திவேல் என்பவர் கடந்த 13 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் திடீரென்று மேல்அச்சமங்கலம் ஊராட்சி செயலாளராக மாற்றப்பட்டு, அங்கிருந்தவர் திம்மணாமுத்தூர் ஊராட்சி செயலாளராக மாற்றப்பட்டார்.

இதனை கண்டித்து திம்மணாமுத்தூர் ஊராட்சியை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் காமராஜ் பொதுமக்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன் பணிகளை பார்வையிட சென்றுள்ளார். அவரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளோம், அவர் வந்தவுடன் உங்கள் கோரிக்கைகள் குறித்து பேசப்படும் என்றார்.

அதற்கு பொதுமக்கள் எங்கள் ஊரில் பல்வேறு பணிகள் உள்ளது. அது பற்றி ஊராட்சி செயலாளருக்கு தான் தெரியும் என கூறி போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

உடனடியாக திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டார். போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிபட்டனர்.

இச்சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகள்