பொதுப்பணித்துறை என்ஜினீயர் வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளை

புதுவையில் பொதுப்பணித்துறை என்ஜினீயர் வீட்டில் 40 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-09-06 22:54 GMT

புதுச்சேரி,

புதுவை வேல்ராம்பேட் என்ஜினீயர்ஸ் காலனி மெயின்ரோட்டில் ஒரு மாடி வீட்டில் பொதுப்பணித்துறை என்ஜினீயர் ராமச்சந்திரன் (வயது57) தனது மனைவி கவுரியுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் வெளியூரில் தங்கி இருந்து படித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் கடந்த 2–ந் தேதியன்று ராமச்சந்திரன், அவருடைய மனைவி கவுரி இருவரும் காரில் திருச்செந்தூருக்கு சென்றனர். அங்கிருந்து மறுநாள் புதுவை திரும்பினர். இருவரும் உடல் அசதி காரணமாக வீட்டின் மற்றொரு அறையில் தூங்கினார்கள். மறுநாள் அறைகளை சுத்தம் செய்வதற்காக சென்ற போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் நாலாபுறமும் சிதறிக்கிடந்தது கண்டு திடுக்கிட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பீரோவில் இருந்த நகைகளை சரிபார்த்த போது 40 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், லேப்–டாப் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. மாடியின் கதவை உடைத்து மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது. எனவே வீட்டில் யாரும் இல்லாததை முன்கூட்டியே நோட்டம் விட்டு தெரிந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சென்ற போலீஸ் மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

புதுவையில் கடந்த சில மாதங்களாக வீடு புகுந்து கொள்ளை, பெண்கள், மூதாட்டிகளை குறிவைத்து நகைகள் பறிப்பு என குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரெயின்போ நகரில் உள்ள பல் டாக்டரின் வீட்டில் புகுந்து 40 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்றனர். அதேபோல் மேட்டுப்பாளையத்தில் அரசு அதிகாரியின் ஒருவருடைய வீட்டில் பெரிய அளவில் கொள்ளை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் எதுவும் வரவில்லை.

இந்தநிலையில் தற்போது முதலியார்பேட்டையில் பொதுப்பணித்துறை என்ஜினீயர் வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து புதுவையில் டாக்டர், அரசு அதிகாரி, என்ஜினீயர் வீடுகள் என குறிவைத்து நடந்து வரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தேவையான இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்