பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 16 வயதில் குழந்தை பெற்ற மாணவி சாவு

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 16 வயதில் குழந்தை பெற்ற மாணவி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2017-09-07 00:00 GMT

சேலம்,

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் பிளஸ்–1 படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் குழந்தை பெற்ற நிலையில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கடந்த மாதம் 29–ந்தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அந்த மாணவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிளஸ்–1 படித்து வந்த அந்த மாணவிக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வாலிபர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதனால் மாணவி கர்ப்பமடைந்தார். மாணவியின் உடல் சற்று பருமனாக இருந்ததால் அவர் கர்ப்பம் அடைந்தது பெற்றோரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்