நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி திருவாரூர் அருகே பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2017-09-06 23:00 GMT
திருவாரூர்,

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதாவிற்கு நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக திருவாரூர் அருகே உள்ள திருநெய்ப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்பை புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். உயிரிழந்த மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்