நீட்தேர்வுக்கு எதிராக போராட்டம்: கோவில்பட்டியில், 31 பேர் கைது

கோவில்பட்டியில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆதிதமிழர் பேரவை மற்றும் தமிழ் புலிகள் அமைப்பினர் 31 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-09-06 23:15 GMT
கோவில்பட்டி,

நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு வரையிலும் சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும், ஆதி தமிழர் பேரவையினர் நேற்று காலையில் கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மாநில அமைப்பு செயலாளர் அருந்ததி அரசு, வடக்கு மாவட்ட தலைவர் முத்துகுமார், செயலாளர் நம்பிராஜ் பாண்டியன், நிதி செயலாளர் உதயசூரியன், இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன், ஒன்றிய தலைவர் ராஜாமணி, விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள், தலைமை தபால் நிலைய ஊழியர்களை வெளியேற்றி, அலுவலகத்துக்கு பூட்டு போட முயன்றனர். இதனால் ஆதி தமிழர் பேரவையினருக்கும், தபால் நிலைய ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

உடனே அங்கு சென்ற கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட ஆதி தமிழர் பேரவையைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 20 பேரை கைது செய்தனர்.

இதேபோன்று, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் புலிகள் அமைப்பினர் கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடுவதற்காக, கோவில்பட்டி- எட்டயபுரம் ரோட்டில் ஊர்வலமாக வந்தனர். கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் சென்றபோது போலீசார் அவர்களை வழிமறித்தனர். உடனே அந்த அமைப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் தாஸ், துணை செயலாளர் பாலு, செய்தி தொடர்பாளர் பீமாராவ், நகர செயலாளர் தமிழரசு, கனியமுதன், வீரசமர் உள்ளிட்ட 11 பேரை கோவில்பட்டி கிழக்கு போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்