மாவட்டத்தில் பலத்த மழை கோமுகி அணையின் நீர்மட்டம் 29 அடியாக உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதில் கோமுகி அணையின் நீர்மட்டம் 29 அடியாக உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விழுப்புரம்,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மன்னார் வளைகுடா பகுதியின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உள்ளதால் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. விழுப்புரம் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பிடாகம், கண்டமானடி, குச்சிப்பாளையம், வேலியம்பாக்கம், அத்தியூர், காணை, கொத்தமங்கலம், பெரும்பாக்கம், தோகைப்பாடி, கோலியனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு 11 மணிக்கு மேல் பலத்த காற்று வீசியது. அடுத்த சில நிமிடங்களில் இடி– மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் 1 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது.
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக விழுப்புரம் சுதாகர் நகர், கணபதி நகர், மணி நகர், கே.கே. நகர், சித்தேரிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் தண்ணீர் தேங்கியது. பின்னர் நள்ளிரவிலும் அவ்வப்போது விட்டுவிட்டு சாரல் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் இரவில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
இதேபோல் நேற்று முன்தினம் நள்ளிரவு கல்வராயன்மலையில் மழை பெய்தது. இரவு 12 மணிக்கு தொடங்கிய மழையானது அதிகாலை 4 மணி வரை பலத்த மழையாக கொட்டியது. இதனால் வெள்ளிமலை– கச்சிராயப்பாளையம் மலைப்பாதையில் மேல்பரிகம் முதல் குண்டியாநத்தம் வரை திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பணியாளர்கள் மூலம் சாலையில் ஏற்பட்டிருந்த மண்ணை அகற்றினர். கல்வராயன்மலையில் தொடர்ந்து 4 மணி நேரம் பெய்த பலத்த மழையினால் வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழையின்போது மட்டப்பாறை கிராமத்தில் உள்ள அமாவாசை(வயது 40) என்பவருடைய கூரை வீடு இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அமாவாசை இடிபாட்டில் சிக்கி பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடைய கல்வராயன்மலையில் கொட்டித்தீர்த்த மழை காரணமாக அடிவாரத்தில் உள்ள பொட்டியம், கல்படை ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 46 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி அணையில் 19 அடி தண்ணீர் இருந்து வந்தது. நேற்று முன்தினம் கல்வாரயன்மலையில் பெய்த பலத்த மழையால் பொட்டியம், கல்படை ஆறுகள் வழியாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி கோமுகி அணையின் நீர்மட்டம் 29 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி மளமளவென உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.
கல்வராயன்மலையில் பெய்து வரும் மழையால் கோமுகி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அணை நீரை நம்பி பாசனம் செய்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:–
மரக்காணம்– 30
செஞ்சி– 28
விழுப்புரம்– 22
வானூர்– 22
உளுந்தூர்பேட்டை– 20
திருக்கோவிலூர்– 15
சங்கராபுரம்– 12
கள்ளக்குறிச்சி– 9.50
மொத்த மழை அளவு– 158.50
சராசரி– 17.61