135 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிப்பதால் தமிழக அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது: முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
135 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிப்பதால் தமிழக அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ளதாக கோவையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.;
கோவை,
ஈரோட்டில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றுக்காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.30 மணிக்கு கோவை வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:–
கேள்வி:–அ.தி.மு.க. ஆட்சி மீது தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வருகிறாரே. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:–நாங்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் அவர் தொடர்ந்து அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவரது குற்றச்சாட்டுகள் தவறானது.
கேள்வி:–சென்னையில் நடந்த கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் தான் பங்கேற்று உள்ளனர். அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதால் மைனாரிட்டி அரசு தான் நடப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?
பதில்:–அ.தி.மு.க.வுக்கு 134 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சட்டபேரவைத் தலைவர் உள்பட மொத்தம் 135 எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வில் தான் உள்ளனர். எனவே இந்த அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது.
கேள்வி:–நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்களே?
பதில்:–நீட் தேர்வை பொறுத்தவரை தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று இறுதி வரை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து போராடினோம். உச்ச நீதிமன்றத்தில் நமக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகம் செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய சூழ்நிலையில் அரசு இருக்கிறது. ஒரு தீர்ப்பின் மீது எப்படி நடக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். மாநில அரசை பொறுத்தவரை தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை வந்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கலெக்டர் ஹரிகரன், மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், வி.சிஆறுகுட்டி, எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினர், அதிகாரிகள் வரவேற்றனர்.