காரைக்குடி கல்லூரிகளில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காரைக்குடி பகுதியில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2017-09-06 23:00 GMT

காரைக்குடி,

மருத்துவ படிப்பிற்கான தேசிய நுழைவு தேர்வான நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை ரத்து செய்யக்கோரியும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடிய அரியலூர் மாணவி அனிதா கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அனிதா தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக மத்திய–மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர்கள், பல்வேறு அமைப்பினர், கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய–மாநில அரசுகளை கண்டித்தும் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இதேபோல் அழகப்பா என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களும், அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் அவரவர் கல்லூரிகளில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக மத்திய–மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பினர். பின்னர் கல்லூரி முதல்வர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து அழகப்பா என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர். அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரிக்கு போராட்டம் காரணமாக விடுமுறை விடப்பட்டது.

இதேபோன்று செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்