மாணவி அனிதா தற்கொலை: திருத்தணியில் ரெயில் மறியல் 50 பேர் கைது

மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு திருத்தணியில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-09-05 23:27 GMT
திருத்தணி,

‘நீட்’ தேர்வால் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்ததால் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நேற்று காலை திருத்தணி ரெயில் நிலையத்தில் தலித் மக்கள் முன்னணியின் மாநில அமைப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் 50 பேர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கருடாத்திரி எக்ஸ்பிரஸ் ரெயிலை அவர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி அனிதா சாவுக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பு ஏற்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.

இதையடுத்து அங்கு இருந்த போலீசார், ரெயில் மறியலை கைவிடும்படி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதை அவர்கள் ஏற்காததால் ரெயில் மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த ரெயில் மறியல் போராட்டம் காரணமாக கருடாத்திரி எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக திருத்தணியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

பேரம்பாக்கம் பஜாரில் கடம்பத்தூர் தெற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கடம்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஈசன் தலைமையில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் ரமேஷ், துணை செயலாளர் டில்லி, அமைப்பாளர் விஜயகாந்த் உள்பட 100-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு மாணவி அனிதா உருவ படத்துக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு பேரம்பாக்கம் மேம்பாலம் வரை மவுன ஊர்வலம் சென்றனர்.

மேலும் செய்திகள்