பொதுமக்களை கவுரவிக்க திட்டம்: ‘டெங்கு’ ஒழிப்பு பணிக்காக ‘வாட்ஸ்அப்’ எண் வெளியீடு

‘டெங்கு‘ ஒழிப்பு பணிக்கென மாவட்ட அளவில் ‘வாட்ஸ்அப்’ எண் வெளியிடப்பட்டது. மேலும் பொதுமக்களை கவுரவிக்க திட்டம் உள்ளதாகவும், மெகா தூய்மை பணி முகாம் இன்று நடப்பதாகவும் கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.

Update: 2017-09-06 02:30 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் உள்ள பொது இடங்களில் நீர்தேங்கி இருந்தாலோ, சுகாதாரம் இன்றி காணப்பட்டாலோ அவற்றை தூய்மை செய்வதற்கு முன்னும், தூய்மை செய்யப்பட்ட பின்னும் ‘ஸ்மார்ட்போன்‘ மூலம் புகைப்படம் எடுத்து தங்கள் பெயர், கிராமம், ஊராட்சி ஒன்றியம், தாலுகா, தூய்மை செய்யப்பட்ட நாள், பின்கோடுடன் 80981 60003 என்ற மாவட்ட அளவிலான ‘வாட்ஸ்அப்’ எண்ணிற்கு போட்டோவோ அல்லது செல்பியோ எடுத்து அனுப்பி வைக்கலாம்.
மாவட்ட அளவில் அதிக அளவிலான தூய்மை பணியினை மேற்கொண்ட பொதுமக்கள் தேர்வு செய்யப்பட்டு சேலம் மாவட்டத்தை காய்ச்சல் இல்லாத மாவட்டமாக மாற்றியதற்கு உறுதுணையாக தங்கள் பங்களிப்பை அளித்தமைக்காக கவுரவிக்கப்பட உள்ளனர்.

டெங்கு ஒழிப்பில் பொதுமக்கள் ஒத்துழைத்தால் கொசுப்புழு உருவாகாமல் எளிதாக தடுக்க முடியும். சேலம் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் இன்று(புதன்கிழமை) நடைபெறும் தூய்மை படுத்தும் முகாமில் சுகாதாரத்துறை ஊழியர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என மொத்தம் 1½ லட்சம் பேர் பங்கேற்கிறார்கள். 500 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த பணி வாரந்தோறும் புதன்கிழமை இனி நடக்கும். குடிநீரில் குளோரின் கலந்து டெங்கு புழுக்கள் ஒழிக்கப்படும். நில வேம்பு கசாயம் பஞ்சாயத்துகள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும்.

டெங்கு கொசு புழு இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்த உடன், அந்த வீடுகளில் டெங்கு கொசு புழு இல்லை என்ற ஸ்டிக்கர் ஒட்டப்படும். டெங்கு கொசு புழு ஒழிப்பு குறித்து நோட்டீஸ் வினியோகம், விழிப்புணர்வு பேரணி, ஸ்டிக்கர்கள், தியேட்டர்களில் சிலைடுகள் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ‘எலிசா‘ டெஸ்டில் தான் எந்த காய்ச்சல் என்பதை முழுமையாக கண்டறிய முடியும். தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெறுபவர்களை கண்காணித்து வருகிறோம். காய்ச்சல் பாதித்தவர்கள் அரசு மருத்துவமனையில் நல்ல சிகிச்சையை செலவில்லாமல் பெறலாம். போலி டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக சேலம் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடுள்ள அனைத்து பணியாளர்களையும் பொதுமக்கள் எளிதாக அடையாளம் கண்டு கொண்டு கொசு ஒழிப்பு பணிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் அடையாள அட்டையினையும், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் குளோரினேசன் செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்யும் கருவியையும் ஊராட்சி செயலாளர்களுக்கு கலெக்டர் ரோகிணி வழங்கினார்.

மேலும் செய்திகள்