குண்டர் சட்டம் ரத்து: மாணவி வளர்மதி மீண்டும் படிக்க அனுமதி அளிக்கப்படும்

குண்டர் சட்டம் ரத்தானதால், மாணவி வளர்மதி மீண்டும் படிக்க அனுமதி அளிக்கப்படும் என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.

Update: 2017-09-06 01:30 GMT
கருப்பூர்,

தமிழ்நாடு பொதுநல மாணவர் எழுச்சி இயக்க சேலம் மாவட்ட பொருளாளரும், பெரியார் பல்கலைக்கழக மாணவியுமான வளர்மதி கடந்த ஜூன் மாதம் சேலம் அரசு கலை அறிவியல் கல்லூரி முன்பு, நெடுவாசல், கதிராமங்கலம் ஆகிய கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாணவ, மாணவிகளுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்தார்.

இந்த நிலையில் அவர் மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாக கூறி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நெடுவாசல், கதிராமங்கலம் ஆகிய கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக கோவை சிறையில் அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டார் இந்த நிலையில் மாணவி வளர்மதி உண்ணாவிரதத்தை நேற்று முன்தினம் வாபஸ் பெற்றுக் கொண்டார். தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் 3 நாட்கள் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக்கொண்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மாணவி வளர்மதி மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அந்த மாணவி மீண்டும் படிப்பை தொடர அனுமதிக்கப்படுவாரா? என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மணிவண்ணனிடம் கேட்டதற்கு அவர் பதில் அளித்தார். அவர் கூறும் போது, ‘மாணவி வளர்மதி மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்பட்ட விவரம் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அந்த உத்தரவு எங்களுக்கு வந்தவுடன் வளர்மதி விரும்பினால் அவர் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து படிக்க அனுமதிக்கப்படுவார்‘ என்றார்.

கைதான மாணவி வளர்மதி பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. இதழியல் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்