அமைதியை நிலைநாட்ட முடியாவிட்டால் இந்த அரசு ஏன்? ஷோபா எம்.பி. கேள்வி

அமைதியை நிலைநாட்ட முடியாவிட்டால் இந்த அரசு எதற்கு உள்ளது என்று ஷோபா எம்.பி. கூறினார்.

Update: 2017-09-05 23:15 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று பா.ஜனதா இளைஞரணியின் மோட்டார் சைக்கிள் பேரணியை தொடங்கி வைக்க வந்த ஷோபா எம்.பி. பேசும்போது கூறியதாவது:-

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த கொலை வழக்குகளில் தொடர்புடைய முஸ்லிம் அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஆனால் இந்த காங்கிரஸ் அரசு அந்த அமைப்புகளை பாதுகாக்கிறது. சித்தராமையா அரசு விதான சவுதாவின் புனிதத்தை கெடுத்துவிட்டது. இந்த அரசுக்கு இன்னும் 6 மாத காலம் தான் உள்ளது.
பா.ஜனதாவின் மோட்டார் சைக்கிள் பேரணிக்கு மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் எங்களை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இந்த அரசு எங்களின் பேரணிக்கு அனுமதி நிராகரித்து இருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். அமைதியை நிலைநாட்ட முடியாவிட்டால் இந்த அரசு எதற்கு உள்ளது.

நியாயமான முறையில் இந்த பேரணி நடக்கிறது. அமைதிக்கு நாங்கள் பங்கம் விளைவிக்க மாட்டோம். பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசு இவ்வாறு அனுமதியை நிராகரிப்பது சரியல்ல. நாங்கள் தொடர்ந்து போராடு வோம். சர்வாதிகார தோரணையில் இந்த அரசு செயல்படுகிறது. இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி வருகிறது. இந்த அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு ஷோபா பேசினார்.

முன்னாள் துணை முதல்- மந்திரி ஆர்.அசோக் பேசுகையில், “இந்த அரசு ஒரு கோழை அரசு. இந்த அரசிடம் இருந்து நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது. பா.ஜனதா அரசு அமைந்தால் இந்த மாநிலத்திற்கு நல்ல திட்டங்களை கொண்டுவர முடியும். காங்கிரஸ் அரசால் நல்ல பணிகளை செய்ய முடியாது. கர்நாடகத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வனத்துறை மந்திரி ரமாநாத்ராயை பதவி நீக்கம் செய்ய வேண்டும்“ என்றார்.

மேலும் செய்திகள்