திருச்சி காந்தி மார்க்கெட் கள்ளிக்குடியில் புதிதாக கட்டப்பட்ட மத்திய வணிக வளாகத்துக்கு மாற்றம்

கள்ளிக்குடியில் புதிதாக கட்டப்பட்ட மத்திய வணிக வளாகத்திற்கு திருச்சி காந்திமார்க்கெட் மாற்றப்படுகிறது. இந்த புதிய வணிக வளாகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Update: 2017-09-05 23:00 GMT
திருச்சி,

தமிழகத்தில் இரவு, பகல் என்ற பாகுபாடு இன்றி ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் 24 மணி நேரமும் இயங்க கூடிய மார்க்கெட்டுகளில் திருச்சி காந்திமார்க்கெட்டும் ஒன்றாகும். நிலையான கடைகள், தரைக்கடைகள், இரவுநேர கடைகள், மொத்த வியாபார கடைகள் என இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சுதந்திர போராட்டத்தின்போது மகாத்மா காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தபோது, அவரால் அடிக்கல் நாட்டப்பட்டு 1953-ம் ஆண்டு ராஜாஜி சென்னை மாகாண முதல்-அமைச்சராக இருந்தபோது, இந்த மார்க்கெட் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. காந்தி அடிக்கல் நாட்டியது என்பதால் இதற்கு காந்திமார்க்கெட் என பெயர் சூட்டப்பட்டது.

காந்திமார்க்கெட் திருச்சி நகரின் மையப்பகுதியில் இருப்பதால், சரக்குகளை இறக்க மற்றும் ஏற்றிக்கொண்டு செல்ல வரும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களால் அடிக்கடி கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது உண்டு. இதன் காரணமாக காந்திமார்க்கெட்டை நகருக்கு வெளியே ஏதாவது ஒருபகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, திருச்சி- மதுரை மெயின்ரோட்டில் கள்ளிக்குடி என்ற இடத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய மார்க்கெட் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

திருச்சி நகரின் மையப்பகுதியில் இருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கள்ளிக்குடி என்ற இடத்தில் ரூ.65 கோடி திட்ட மதிப்பீட்டில் காய்கறி, பழங்கள் மற்றும் மலர் களுக்கான மத்திய வணிக வளாகம் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு உள்ளது. காந்தி மார்க்கெட்டில் உள்ள மொத்த மற்றும் சில்லறை கடைகள் அனைத்தும் புதிய வணிக வளாகத்திற்கு மாற்றப்படுகிறது. இந்த புதிய வணிக வளாகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மத்திய வணிக வளாகத்தில் தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 19 பிளாக்குகளில் தலா 100 சதுர அடியில் 736 கடைகள், 150 சதுர அடியில் 264 கடைகள் என மொத்தம் 1000 கடைகள் உள்ளன. 2 ஆயிரம் மெட்ரிக் டன் குளிர்பதனக் கிடங்கு, வங்கி, 2 தரம் பிரிப்பு கூடங்கள், மாடிக்கு பொருட்களை கொண்டு செல்ல லிப்ட்டுகள் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் ஒருங்கே அமைந்துள்ளன.

இதனையொட்டி கள்ளிக்குடி வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி பங்கேற்று முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார். வேளாண்மை துறை இணை இயக்குனர் உதுமான் முகைதீன், துணை இயக்குனர் (வேளாண் விற்பனை மற்றும் வணிகம்) கைலாசபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தி, திருச்சி விற்பனை குழு செயலாளர் மல்லிகா, மேற்பார்வையாளர் காந்தி காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்