கிணற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் சாவு நண்பர்களுடன் குளிக்க சென்ற போது பரிதாபம்

பெரம்பலூர் அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்து கொண்டிருந்த போது நீரில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2017-09-05 22:15 GMT
பெரம்பலூர்,

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் செல்வகுரு (வயது 20). இவர், பெரம்பலூர்-துறையூர் ரோட்டில் உள்ள பகுதியில் அறை எடுத்து தங்கி அங்குள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்திற்கு சென்று விட்டனர். இதனால் வகுப்புகள் நடைபெறவில்லை. இந்த நிலையில் செல்வகுரு தனது கல்லூரி நண்பர்களான பிரபு, நவீன்குமார், பிரேம்குமார் ஆகியோருடன் கல்லூரிக்கு அருகே அரணாரை பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென நீரில் மூழ்கிய செல்வகுரு காணாமல் போய்விட்டார்.

இதையடுத்து அவரது நண்பர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் பால்ராஜ் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி செல்வகுருவை தேடினர். சுமார் ¾ மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு இறந்த நிலையில் செல்வகுருவின் உடலை தீயணைப்பு படைவீரர்கள் மீட்டு மேலே கொண்டு வந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் செல்வகுருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் பலியான சம்பவம் அந்த கல்லூரி மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்