சிவமொக்கா மாவட்டத்திற்குள் நுழைய பிரமோத் முத்தாலிக்கிற்கு தடை

சிவமொக்கா மாவட்டத்திற்குள் நுழைய பிரமோத் முத்தாலிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று தாவணகெரேவில் விட்டுவிட்டனர்.

Update: 2017-09-05 21:51 GMT
சிக்கமகளூரு,

ஸ்ரீராமசேனை அமைப்பின் மாநில தலைவர் பிரமோத் முத்தாலிக் நேற்று முன்தினம் சிக்கமகளூரு டவுன் பசவனஹள்ளி பகுதியில் உள்ள கணபதி கோவிலுக்கு வந்தார். பின்னர் அவர் அங்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். அதையடுத்து அவர் சிவமொக்கா மாவட்டம் ஒசநகருக்கு சென்று அங்குள்ள ஒரு கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தது. இதற்காக சிவமொக்கா மாவட்டத்தில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சிவமொக்கா மாவட்ட நிர்வாகம் சார்பில், பிரமோத் முத்தாலிக் சிவமொக்கா மாவட்டத்திற்குள் நுழைய தடை விதித்து இருப்பதாக போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்பேரில் ஒசநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதுசூதனன் தலைமையில் போலீசார் சிக்கமகளூரு மாவட்டத்திற்கு சென்றனர். பின்னர் போலீசார், பிரமோத் முத்தாலிக்கிடம் சிவமொக்கா மாவட்டத்திற்குள் நுழைய உங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று கூறி அதற்கான ஆவணங்களை கொடுத்தனர். அதை பெற்றுக் கொண்ட பிரமோத் முத்தாலிக் தான் சிவமொக்கா மாவட்டத்திற்கு வரவில்லை என்றும், சிக்கமகளூருவிலேயே இருந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.
ஆனால் அதை ஏற்க போலீசார் மறுத்துவிட்டனர்.

மேலும் பிரமோத் முத்தாலிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று தாவணகெரேவில் விட்டுவிட்டனர்.

பிரமோத் முத்தாலிக்கை போலீசார் அழைத்துச் சென்று தாவணகெரேவில் விட்டுவிட்டு வந்த சம்பவம் சிக்கமகளூரு மற்றும் சிவமொக்கா மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்