தாவணகெரே அருகே ரெயில் முன்பாய்ந்து வாலிபர், இளம்பெண் தற்கொலை
தாவணகெரே அருகே, ரெயில் முன்பு பாய்ந்து வாலிபரும், இளம்பெண்ணும் தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் காதல் ஜோடியா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிக்கமகளூரு,
தாவணகெரே தாலுகா பாடா பகுதியில் ரெயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த வழியாக பெங்களூரு– மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அப்போது தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டு இருந்த 30 வயது வாலிபரும், 25 வயது இளம்பெண்ணும் திடீரென ரெயில் முன்பு பாய்ந்தனர்.
ரெயில் மோதிய வேகத்தில் அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் துண்டாகி பரிதாபமாக இறந்தார்கள். இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தாவணகெரே ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார் வாலிபர், இளம்பெண்ணின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். ஆனால் அவர்கள் யார்? எந்தப்பகுதியை சேர்ந்தவர்கள்? என்பது உடனடியாக போலீசாருக்கு தெரியவில்லை. இதையடுத்து வாலிபர், இளம்பெண்ணின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக தாவணகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தாவணகெரே ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.