கோவில்பட்டி பகுதியில் பலத்த மழை: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

கோவில்பட்டி பகுதியில் நேற்று பெய்த பலத்த மழையால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. உப்பு ஓடையில் தற்காலிக பாலத்தை வெள்ளம் அடித்து சென்றது.

Update: 2017-09-05 23:00 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டியில் நேற்று மதியம் 3.50 மணி அளவில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் நீடித்த பலத்த மழையால் சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோவில்பட்டி பகுதிகளில் இருந்து மூப்பன்பட்டி கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்கள், ஓடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாராததால், மழைநீர் வழிந்தோட முடியாமல், நகரில் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

கோவில்பட்டி மெயின் ரோடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து சத்யபாமா தியேட்டர் சந்திப்பு வரையிலும் குளம் போன்று தண்ணீர் தேங்கி கிடந்தது. கடலைக்கார தெரு, ஊரணி தெரு, தங்க மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. தனுஷ்கோடியாபுரம் சந்திப்பு, தினசரி மார்க்கெட் பகுதிகளிலும் மழைநீர் குளம் போன்று தேங்கி கிடந்தது.

இளையரசனேந்தல் ரோடு சுரங்க வழிப்பாதையில் சுமார் 6 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி கிடந்தது. அப்போது கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து அண்ணா பஸ் நிலையத்துக்கு வந்த அரசு பஸ், சுரங்க வழிப்பாதையில் பழுதடைந்தது. உடனே பஸ்சில் இருந்த 25-க்கு மேற்பட்ட பயணிகளை அப்பகுதியினர் பத்திரமாக வெளியே மீட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

சங்கரலிங்கபுரம் ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெங்கடாசலபுரம் காலனியில் ஓடையை தூர்வாராததால், சுமார் 30 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. எனவே அங்கு ஓடையை தூர்வாரி, பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்த னர்.

கழுகுமலை- கோவில்பட்டி மெயின் ரோடு குமாரபுரம் பஸ் நிறுத்தம் அருகில் உப்பு ஓடையில் பழுதடைந்த பாலத்தை அகற்றி விட்டு, புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பழைய பாலத்தின் அருகில் மணல் மூடைகள் மற்றும் ராட்சத குழாய்களை வைத்து தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு இருந்தது.

கழுகுமலை பகுதிகளில் நேற்று மாலையில் பெய்த பலத்த மழையில், உப்பு ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் அங்கு அமைக் கப்பட்டு இருந்த தற்காலிக பாலத்தை வெள்ளம் அடித்து சென்றது. கயத்தாறு சுற்று வட்டார பகுதிகளிலும் மாலையில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. 

மேலும் செய்திகள்