100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளியில் மாணவ-மாணவிகள் மரத்தடியில் படிக்கும் அவலம்

வந்தவாசி அருகே 100 சதவீத தேர்ச்சி பெற்ற இளங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகள் மரத்தடியில் படிக்கும் நிலை உள்ளது.

Update: 2017-09-05 22:30 GMT
வந்தவாசி,

வந்தவாசி தாலுகா இளங்காடு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி 2014-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்பட்டபோது இப்பள்ளிக்கான சொந்த கட்டிடம் எதுவும் இல்லை. இப்போது இந்த பள்ளியில் இளங்காடு மற்றும் தண்டலம் கிராமங்களை சேர்ந்த 130 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

ஏற்கனவே நடுநிலைப்பள்ளியாக இருந்த இடம் இப்போது தொடக்கப்பள்ளியாக செயல்படுகிறது. இந்த வளாகத்திலேயே உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அங்குள்ள பழைய கட்டிடங்களில் 3 கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து 2 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. மற்றொரு கட்டிடம் இடிக்கப்பட வேண்டும். 2 சிறிய பழைய கட்டிடம் மட்டுமே உள்ளது.

பழைய கட்டிடத்திலும், அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்திலும் வகுப்பறைகள் இயங்கிய போதிலும் போதிய வகுப்பறைகள் இல்லாத காரணத்தினாலும், இட பற்றாக்குறை இருப்பதாலும் உயர்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடி நிழலில் அமர்ந்து படிக்கின்ற அவல நிலை உள்ளது.

உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தும்போதே இப்பள்ளிக்கு சொந்த கட்டிடம் கட்ட கிராமத்தின் சார்பிலோ அல்லது அரசு நிலத்திலோ இடம் ஒதுக்க வேண்டும். ஆனால் இதுநாள் வரையில் கட்டிடம் கட்ட இடம் கிராமத்தின் சார்பிலோ, அரசு சார்பிலோ இடம் ஒதுக்கப்படாததுடன் அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

2014-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதில் இருந்து நல்ல தேர்ச்சி விகிதத்தையே இப்பள்ளி பெற்று வருகிறது. சிறந்த தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை கொண்டுள்ள காரணத்தால் கடந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சியை இப்பள்ளி பெற்றது. அதற்கு முந்தைய ஆண்டிலும் சிறப்பான தேர்ச்சி விகிதத்தை பெற்றது.

இவ்வாறு சிறப்பான தேர்ச்சி விகிதத்தை கொண்டுள்ள இப்பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கல்வித்துறை செய்து கொடுத்தால் மேலும் பல முன்னேற்றங்களை இப்பள்ளி பெறுவதுடன், சிறந்த மாணவர்களை உருவாக்கும் என்பது திண்ணம்.

பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்களை கட்ட கிராமத்தினரும், அரசு துறையினரும் முனைப்பு காட்ட வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள், மாணவ-மாணவிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இப்பள்ளி உயர் நிலைப்பள்ளியாக உருவான அதே ஆண்டில் அறிவிக்கப்பட்ட அத்திப்பாக்கம் உள்பட பல பள்ளிகளுக்கு சொந்தமாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்