எடப்பாடி பழனிசாமி - தினகரன் அணிகள் இடையே தகராறு: அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைப்பு

எடப்பாடி பழனிசாமி - தினகரன் அணிகள் இடையே தகராறு ஏற்பட்டது. அதைதொடர்ந்து நன்னிலம் ஒன்றிய அ.தி.மு.க. அலுவலகத்திற்கு தாசில்தார் பிரித்திவிராஜன் சீல் வைத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-09-05 23:15 GMT
நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.காமராஜ், உணவுத்துறை அமைச்சராக உள்ளார். நன்னிலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக ராம.குணசேகரன், வடக்கு ஒன்றிய செயலாளராக அன்பழகன் ஆகியோர் இருந்து வந்தனர். இவர்கள் இருவரும் எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்தவர்கள். இந்தநிலையில் இவர்களை நீக்கிவிட்டு தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக உதயகுமார், வடக்கு ஒன்றிய செயலாளராக பாண்டியன் ஆகியோரை டி.டி.வி. தினகரன் அறிவித்தார். இதனை எடப்பாடி பழனிசாமி அணியினர் ஏற்க மறுத்தனர்.

இந்தநிலையில் நன்னிலம் ஒன்றிய அ.தி.மு.க. அலுவலகம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும், டி.டி.வி. தினகரன் அணியினருக்கும் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக நன்னிலம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் பிரித்திவிராஜன் தலைமையில், அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடை பெற்றது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக டி.டி.வி. தினகரன் அணியை சேர்ந்த உதயகுமார், சந்திரசேகர், பாலாஜி, கோவிந்தராஜ், இளம்பரிதி ஆகிய 5 பேர் மீதும், எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த ராம.குணசேகரன், அன்பழகன், சம்பத், சுவாதி கோபால், பக்கிரிசாமி ஆகிய 5 பேர் மீதும் நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் நேற்று நன்னிலம் தாசில்தார் அலுவலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்து, திருவாரூர் உதவி கலெக்டர் முத்துமீனாட்சி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இரு அணிகளை சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாலும், கட்சி அலுவலகத்திற்கு இரு அணியினரும் உரிமை கொண்டாடுவதாலும், சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு நன்னிலம் ஒன்றிய அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்குமாறு உதவி கலெக்டர் முத்துமீனாட்சி, தாசில்தார் பிரித்திவிராஜனுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கட்சி அலுவலகத்திற்கு, தாசில்தார் பிரித்திவிராஜன் சீல் வைத்தார். கட்சி அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் நன்னிலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்