மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-05 23:15 GMT

கோவை,

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோவை அரசு கல்லூரி மாணவர்கள், கல்லூரி நுழைவுவாயிலில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் கருத்து தெரிவித்து வந்தன. யாரும் எதிர்பாராத விதமாக நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை தமிழக அரசு தொடங்கி நடத்தியது. இதனால் தமிழக மருத்துவ படிப்பில் சேர காத்திருந்த தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்கள் நீட் தேர்வில் எளிதாக தேர்ச்சி பெற்று மருத்து படிப்பில் சேர்ந்து விட்டனர். மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத வேதனையில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இது தொடரக்கூடாது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அதுவரை தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம்‘ என்றனர்.

கோவை சட்ட கல்லூரி மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரியும், இதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷமிட்டனர்.

கோவைப்புதூரில் உள்ள சி.பி.எம். அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்கள் 200–க்கும் மேற்பட்டோர் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் இருந்து கோவைப்புதூர் சந்திப்பு வரை மாணவி அனிதாவின் உருவப்படத்தை கைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.

இதேபோல் கோவையில் உள்ள பல்வேறு தனியார் கல்லூரி மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தே.மு.தி.க. சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் காட்டன் செந்தில் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் கோவிந்தராஜ், பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆதித்தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் அணிந்து போராட்டம் செய்தனர். கோவையில் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் செய்திகள்