ஈரோட்டில் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று வேலை கிடைக்காத ஆசிரிய–ஆசிரியைகள் போராட்டம், 80 பேர் கைது
தகுதித்தேர்வில் வெற்றி பெற்று வேலை கிடைக்காத ஆசிரிய–ஆசிரியைகள் நேற்று ஈரோட்டில் நடத்திய நூதன போராட்டத்தில் கலந்து கொண்ட 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு,
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கு தகுதியான கல்வியியல் பட்டம் மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி வெற்றி பெற்றால் மட்டுமே அரசு பள்ளிக்கூடங்களில் பணிநியமனம் செய்யப்படுகிறார்கள். இந்தநிலையில் கடந்த 2013–ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று வேலை கிடைக்காத ஆசிரிய–ஆசிரியைகள் ஒரு கூட்டமைப்பாக சேர்ந்து வேலை கேட்டு பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே மதுரை, திருச்சி, சென்னையில் போராட்டங்கள் நடத்திய இவர்கள் நேற்று ஈரோட்டில் போராட்டம் நடத்தினார்கள்.
ஆசிரியர் தினத்தை கருப்பு தினமாக கடைபிடிக்கிறோம் என்ற அறைகூவலுடன் ஆசிரிய–ஆசிரியைகள் பலரும் கருப்பு உடைகள் அணிந்தும், கருப்பு பட்டைகள் அணிந்தும் ஈரோடு ரெயில் நிலையம் முன்பு கூடினார்கள். அங்கிருந்து பல்வேறு கோஷங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கையில் ஏந்திக்கொண்டு ஊர்வலமாக காளை மாடு சிலை நோக்கி வந்தனர்.
மேலும் நீலத்திமிங்கலம் படத்தை ஏந்தியபடி அதில் ‘தமிழக அரசு’ என்றும் எழுதி கொண்டு வந்தனர். அவர்களுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முகமூடி அணிந்தபடி ஒருவர் நடந்து வந்தார்.
அவரைப்பார்த்து ஆசிரிய–ஆசிரியைகள் வேலை கேட்டு கோஷம் எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தங்கள் கையில் கொண்டு வந்த வாழை இலைகளை தரையில் போட்டனர். அதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் வேலைவாய்ப்பு தொடர்பான உறுதிமொழிகளை அச்சிட்ட காகிதங்களை பரப்பி வாயில் கவ்வி நூதன முறையில் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அங்கு பணியில் இருந்த சூரம்பட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சரோஜினி, ஏட்டு சிவக்குமார் ஆகியோர் விரைந்து வந்து வாழை இலைகளையும், காகிதங்களையும் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினார்கள்.
மேலும் இங்கு போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று கூறி கலைந்து செல்ல கேட்டனர். ஆனால் எங்களுக்கு வேலை வேண்டும் என்று கூறி ஆசிரியர்கள் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் கோஷங்கள் எழுப்பினார்கள். ஆசிரியை ஒருவர் கையில் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு கடும் வெயிலிலும் தார் ரோட்டில் உட்கார்ந்து கோஷங்கள் எழுப்பினார்.
இதுபற்றி போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோவன், வடிவேல் சுந்தர் ஆகியோர் கூறியதாவது:–
கடந்த 2013–ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி வெற்றி பெற்ற 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், 30 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் என 80 ஆயிரம் பேருக்கு பணி வழங்கக்கோரி முதல்–அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு பலமுறை கோரிக்கை மனுக்கள் அனுப்பி உள்ளோம். பல போராட்டங்களையும் நடத்தி இருக்கிறோம். ஆனால் பயன் இல்லை.
எனவேதான் ஆசிரியர் தினத்தன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் இந்த போராட்டத்தை நடத்தி கருப்பு நாளாக கடைபிடிக்கிறோம்.
தற்போது தமிழகத்தில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை 2013 தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற 80 ஆயிரம் பேரை கொண்டு நிரப்ப வேண்டும். வரும் காலத்திலும் பணியிடங்களை 2013–ல் தேர்ச்சி பெற்றவர்கள் மூலம் நிரப்ப வேண்டும். காரணம் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லும். இப்போதே 4½ ஆண்டுகள் ஆகிவிட்டது.
மேலும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி டி.ராஜா பரிந்துரையின்படி தகுதித்தேர்வில் வெற்றி பெற்று காத்திருக்கும் எங்களுக்கு ஆண்டுக்கு 2 மதிப்பெண்கள் வீதம் உயர்த்தி வழங்க வேண்டும்.
‘நீட்’ தேர்வினால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்று கடந்த மாதம் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி வெற்றி பெற்றும் வேலை கிடைக்காத விரக்தியில் விழுப்புரம் மாவட்டம் கச்சிராபாளையம் பகுதியை சேர்ந்த ஆசிரியை கல்பனா என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியர் படிப்பு முடித்து வெற்றி பெற்று, அதற்காக அரசு நடத்திய தகுதித்தேர்விலும் வெற்றி பெற்று இருக்கிறோம்.
தற்போது எங்கள் குரல் ஆட்சியாளர்களுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே வாழை இலையில் அமைச்சர்களின் போலி வாக்குறுதிகளை போட்டு உண்பதாக போராடுகிறோம். ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது. உங்கள் அறிவிப்புகள் வெற்று காகிதமாக இருக்காமல், பயன் உள்ளதாக மாற்ற வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமார், முருகையன் மற்றும் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 34 ஆசிரியைகள் உள்பட 80 பேரை கைது செய்து வேனில் ஏற்றினார்கள். அவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.