திருவேற்காட்டில் குடிபோதையில் தகராறு செய்த மகன் கொலை; தாய் போலீசில் சரண்

திருவேற்காட்டில் குடிபோதையில் தகராறு செய்த மகனை அவரது தாய் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தார். பின்னர் அவர் போலீசில் சரண் அடைந்தார்.

Update: 2017-09-05 22:00 GMT

பூந்தமல்லி,

திருவேற்காடு கோலடி, அன்பு நகர் 18–வது தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 32). கூலி தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி(29). எம்.எம்.டி.ஏ, காலனியில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் குடிப்பழக்கம் உடைய செந்தில் கடந்த சில வாரங்களாக வேலைக்கு செல்லாமல் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த செந்தில் மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் விரக்தி அடைந்த காமாட்சி தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அனகாபுத்தூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் ஆத்திரம் அடைந்த செந்தில் இரவு முழுவதும் தனது தாய் சரஸ்வதியிடம் (60) தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து மதுபோதை அதிகமானதால் அவர் படுத்து தூங்கினார்.

குடிபோதையில் வீட்டுக்கு வரும் மகனால் தினமும் பிரச்சினை ஏற்பட்டு வருவதால் அவரை கொலை செய்ய சரஸ்வதி திட்டமிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நேற்று அதிகாலையில் வீட்டில் இருந்த கல்லை எடுத்து மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்த செந்தில் தலையின் மீது 3 முறை போட்டார்.

இதில் தலை நசுங்கி படுகாயம் அடைந்த செந்தில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து திருவேற்காடு போலீஸ் நிலையம் சென்ற சரஸ்வதி, குடிபோதையில் தகராறு செய்ததால் தனது மகனை கொன்று விட்டதாக கூறி போலீசில் சரண் அடைந்தார்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிணமாக கிடந்த செந்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து சரஸ்வதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்