திருச்செந்தூரில், ரெயில் புறப்பட்டபோது தண்டவாளத்தில் தவறி விழுந்த நெல்லை ரெயில்வே ஊழியர் தலை துண்டாகி பலி

திருச்செந்தூரில் ரெயில் புறப்பட்டபோது, தண்டவாளத்தில் தவறி விழுந்த நெல்லை ரெயில்வே ஊழியர் தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2017-09-05 00:00 GMT
திருச்செந்தூர்,

கோவையை சேர்ந்தவர் சாய் கிருஷ்ணமூர்த்தி(வயது 37). இவர் நெல்லை ரெயில் நிலையத்தில் மெக்கானிக் பிரிவில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சுகன்யா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் நெல்லை மீனாட்சிபுரம் ரெயில்வே குடியிருப்பில் வசித்து வருகின்றனர். நேற்று காலையில் சாய் கிருஷ்ணமூர்த்தி நெல்லையில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்செந்தூர் ரெயில் நிலையத்துக்கு பணிக்கு வந்தார்.

பின்னர் அவர் மதியம் 2.35 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் பாசஞ்சர் ரெயிலுக்கு தண்ணீர் ஏற்றினார். பின்னர் ரெயில் புறப்பட்டபோது, தண்ணீர் ஏற்றும் குழாயில் சாய் கிருஷ்ணமூர்த்தியின் கால் சிக்கிக் கொண்டது. இதை சற்றும் எதிர்பாராத அவர் கால் தடுமாறி தண்டவாளத்தில் தவறி விழுந்தார். அப்போது யாரும் கவனிக்காததால், ரெயிலின் சக்கரங்கள் அவரது கழுத்தில் ஏறி இறங்கி சென்றன. இதில் சாய்கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே தலை துண்டாகி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ரெயில் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் சாய் கிருஷ்ணமூர்த்தி தண்டவாளத்தில் தலை துண்டாகி பிணமாக கிடந்ததைப் பார்த்த ரெயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நெல்லை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று, தண்டவாளத்தில் தவறி விழுந்து இறந்த சாய் கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயில் புறப்பட்டபோது, ரெயில்வே ஊழியர் தண்டவாளத்தில் தவறி விழுந்து, தலை துண்டாகி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்