மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி துணை சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி, தொழிலாளி. இவருடைய மகன் சாரதி (வயது 4).;

Update: 2017-09-04 23:11 GMT
பொம்மிடி,

சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தான். இவனுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் கடத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அதைத்தொடர்ந்து தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் சாரதி பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள் நத்தமேட்டில் உள்ள துணை சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அந்த துணை சுகாதார நிலையத்திற்கு டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும். துணை சுகாதார நிலையம் முறையாக செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். இதுபற்றி தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சரவணன், அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன், அரசு டாக்டர் ஜீவானந்தம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது நத்தமேடு துணை சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், செவிலியர்களை நிரந்தரமாக நியமித்து உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை ஏற்று முற்றுகையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுதொடர்பாக பொம்மிடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்