ஜவுளிநிறுவனங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்
ஜவுளி நிறுவனங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
கரூர்,
கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அரவக்குறிச்சி பவித்திரம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் பலர் மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், ‘‘தாங்கள் 40 குடும்பத்தினர் பவித்திரம் கிராமத்தில் சொந்த வீடு இல்லாமல் குடிசை அமைத்து பல ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகவும், இதனால் குடியிருக்க வசதியாக சமத்துவப்புரம் காலனி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியிருந்தனர்.
இதேபோல திருக்காம்புலியூர் பகுதியை சேர்ந்த நரிக்குறவர்களான ஆனந்த், மாணிக்கம் உள்பட 7 பேர் வந்து மனு கொடுத்தனர். அதில், ‘‘தங்கள் 7 பேருக்கும் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் இல்லை. எங்கள் முறைப்படி திருமண சடங்கிற்கு துப்பாக்கி முக்கியமாகும். துப்பாக்கி இல்லாததால் பெண்ணிற்கு திருமணம் நடத்தி வைக்க முடியவில்லை. மகன்களுக்கும் திருமணம் செய்ய முடியாமல் உள்ளது. 2015–ம் ஆண்டு விண்ணப்பித்தும் உரிமம் வழங்கவில்லை. எனவே துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்க வேண்டும்’’ எனக்கூறியிருந்தனர்.
லாலாப்பேட்டையில் ரெயில்வே சுரங்கபாதை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், ரெயில்வே கேட் பாதையை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் அப்துல்கலாம் நினைவு அறக்கட்டளை சார்பில் மனு கொடுத்தனர்.
ஜவுளி தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் இரவு நேரங்களில் பணி முடிந்து தாமதமாக செல்லும்போது போலீசார் விசாரிக்கையில் அடையாள அட்டை எதுவும் இல்லாததால் பெரும் சிரமமாக இருப்பதாகவும், பணி பாதுகாப்பிற்காக ஜவுளி நிறுவனங்களில் பெண் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனியார் அமைப்பின் நிர்வாக இயக்குனர் சித்ரா அளித்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்து முன்னணி அமைப்பின் அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சக்திவேல் கொடுத்த மனுவில், ராஜபுரம் பகுதியில் மணல் திருட்டை தடுக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த மணல் கொள்ளையர்கள் தன் மீதும், மனைவி மீதும் தாக்குதல் நடத்தியதாகவும், உரிய பாதுகாப்பு வழங்க கோரியும், ராஜபுரம் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
பசுபதிபாளையம் மேங்காட்டு தெரு, சங்கர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் பொதுப்பாதைக்கான இடத்தை விற்க முயற்சி நடப்பதாகவும் தடுத்து நிறுத்தவும் தெரிவித்திருந்தனர்.
மாவட்ட பொது சேவை மையங்களில் ஆதார் சேவை வழங்கப்பட்டு வருவதை இடமாற்றம் செய்யக்கூடாது எனவும், பொது சேவை மையத்திலே ஆதார் சேவை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட பொது சேவை மையம் நடத்துபவர்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் அமுதனை மீண்டும் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க கோரி அவரது மனைவி தாரணி மனு கொடுத்தார்.
இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் கொடுத்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் கோவிந்தராஜ் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.