பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-04 23:00 GMT

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி வக்கீல்கள் நேற்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர். அப்போது நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த அரியலூர் மாவட்டம் குழுமூர் மாணவி அனிதாவுக்கு வக்கீல்கள் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து பெரம்பலூர் புதிய பஸ்நிலைய பகுதியில் கூடி நின்று மத்திய–மாநில அரசுகளை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க தலைவர் வள்ளுவன்நம்பி தலைமை தாங்கினார். இதில் செயலாளர் சுந்தர்ராஜ், துணைத்தலைவர் ராதாகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி வக்கீல்கள் கோ‌ஷமிட்டனர். இன்று (செவ்வாய்கிழமை) நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பெரம்பலூர் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.

அரியலூர் நீதிமன்றம் முன்பு நேற்று காலை, பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் கூடி நின்று நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அனிதாவின் மரணத்திற்கு காரணம் மத்திய, மாநில அரசுகள் தான் எனக்கூறி கண்டனம் தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அப்போது மாநில அரசின் கல்வி உரிமையை பறிக்கும் விதமாக மத்திய அரசின் செயல்பாடு இனி இருக்க கூடாது, நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு மனம் நொந்து போய் இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு தான் நல்லதொரு முடிவை எடுத்து வழிகாட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்