பெருங்கொளத்தூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும், கலெக்டரிடம் மனு

தண்டராம்பட்டு தாலுகா பெருங்கொளத்தூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் என்று குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.;

Update: 2017-09-04 23:00 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்தும், கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் இருந்தும் கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்று கொண்டார்.

இதில் கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் உதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 340 மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் வழங்கி, மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

கூட்டத்தில் தண்டராம்பட்டு தாலுகா பெருங்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 50–க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எங்கள் கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அரசு டாஸ்மாக் கடை எதுவும் இல்லை. நாங்கள் மது அருந்துவதாக இருந்தால் சுமார் 20 கிலோ மீட்டர் சென்று தான் மது அருந்த வேண்டும். எங்கள் கிராமத்தின் சுற்றுப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் மக்களுக்கு உடல்நல கேடு ஏற்படுகிறது. எனவே, எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில் நலத்திட்ட உதவியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ஒரு மாற்றுத் திறனாளிக்கு ஊன்று கோல், ஒரு மாற்றுத்திறனாளிக்கு நவீன செயற்கை கால் மற்றும் 2 மாற்றுத்திறனாளிக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்