‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம்

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி விழுப்புரம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-09-04 23:00 GMT

விழுப்புரம்,

அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா, ‘நீட்’ தேர்வினால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், இதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், ‘நீட்’ தேர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ– மாணவிகள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வகுப்பை புறக்கணித்து வெளியே வந்தனர்.

தொடர்ந்து, அவர்கள் அனைவரும் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ‘நீட்’ தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் கோ‌ஷம் எழுப்பினார்கள். இந்த போராட்டம் நேற்று மாலை வரை நடைபெற்றது.

மேலும் செய்திகள்