திருப்பூரில் ‘நீட்’ தேர்வை நீக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

‘நீட்’ தேர்வை நீக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது.

Update: 2017-09-05 00:00 GMT

திருப்பூர்,

தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை குலைக்கும் ‘நீட்’ தேர்வை நிரந்தரமாக நீக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன் நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வந்து மாநில உரிமைகளை நிலை நிறுத்த வேண்டும். ‘நீட்’ தேர்வுக்கு தமிழக அரசு அளித்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து நிரந்தர விலக்கை பெற்றுத்தர வேண்டும். மருத்துவ மேற்படிப்புக்கு மாநில அரசு வழங்கும் 50 சதவீத இட ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைபிடிக்க மத்திய, மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர் பாசறையை சேர்ந்த தமிழ் சேக் கோரிக்கைகள் குறித்து பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மழை பெய்தது. இருப்பினும் மழையில் நனைந்தபடி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதுபோல் ‘நீட்’ தேர்வால் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்ததை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று போராடிய அனிதாவை தற்கொலைக்கு தூண்டிய மத்திய, மாநில அரசை கண்டித்தும் திருப்பூர் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று மாலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மைதிலி தலைமை தாங்கினார். செயலாளர் பவித்ரா, பொருளாளர் சகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகள் குறித்து மாநில செயற்குழு உறுப்பினர் சாவித்திரி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்