அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-04 22:30 GMT
கிருஷ்ணகிரி,

அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வுக்கு எதிராக போராடி வந்தார். நீட் தேர்வால் அவரது டாக்டர் ஆகும் கனவு தகர்ந்து போனதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.

இந்திய மாணவர் சங்க மாநில குழு உறுப்பினர் கோபி மற்றும் நிர்வாகிகள் வீரமணி, வசந்தகுமார், அஜீத், வினோத்குமார், சங்கீத் உள்பட 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதையொட்டி அவர்கள் கல்லூரி வளாகத்தில் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். முன்னதாக மாணவி அனிதாவின் படத்திற்கு அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் செய்திகள்