கோவையில் 4–வது நாளாக போராட்டம்: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சாலை மறியல்

கோவையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்த போலீசார் குண்டு கட்டாக தூக்கிச்சென்றதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2017-09-05 02:00 GMT

கோவை,

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் விரக்தி அடைந்த அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் மற்றும் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி கோவையில் நேற்று 4–வது நாளாக போராட்டம் நடைபெற்றது. அனைத்து மாணவர் மற்றும் இளைஞர் கூட்டமைப்பை சேர்ந்த புரட்சிகர இளைஞர் கூட்டமைப்பு, புரட்சிகர மாணவர் முன்னணி, அனைத்து இந்திய இளைஞர் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்கள் நேற்று மாலை 4 மணியளவில் கோவை காந்திபுரம் கிராஸ் கட் சிக்னலில் திரண்டனர். அவர்கள் போராட்டம் நடத்துவது போலீசாருக்கு முதலில் தெரியாது.

மாணவர் கூட்டமைப்பினர் 40 பேர் திடீரென்று 4 சாலைகள் சந்திக்கும் கிராஸ் கட் ரோடு சிக்னலில் உட்கார்ந்து மறியலில் கொண்டனர். சில மாணவர்கள் படுத்துக் கொண்டனர். மாலை நேரம் என்பதால் அந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. ஆனால் திடீரென்று சாலை மறியல் நடந்ததால் வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கிராஸ்கட் ரோடு சிக்னலில் உள்ள 4 சாலைகளிலும் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்ற முயற்சித்தனர். ஆனால் மாணவர்கள் வர மறுத்து சாலையில் படுத்துக் கொண்டதால், போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

ஆனால் போலீசார் தொடர்ந்து மாணவர்களை வேனில் ஏற்ற முயற்சித்தனர். அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டம் நடத்தும் எங்களை போலீசார் வலுகட்டாயமாக கைது செய்கிறார்கள் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 40 பேரை கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு அழைத்து சென்று அடைத்தனர்.

இதுகுறித்து மாணவர், இளைஞர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெரோஸ் பாபு கூறுகையில், ‘தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். கல்வியை மத்திய பட்டியலிலிருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமான தமிழக அரசு பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்’ என்றார்.

இந்த சம்பவத்தினால் காந்திபுரம் பகுதியில் நேற்று மாலை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் ரபீக் தலைமையில் வடகோவை ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அந்த ரெயில் நிலையத்துக்கு நேற்று மாலை 4.30 மணியளவில் மங்களூரிலிருந்து சென்னைக்கு சென்ற ரெயில் வந்தது.

அந்த ரெயிலை அவர்கள் தடுத்து நிறுத்தி மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரெயில் மறியலில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்தனர்.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 10 பேர் கோவை ரெயில் நிலையம் முன்பு திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் நாம் தமிழர் கட்சியினர் கோவை ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கோவை மணி தலைமை தாங்கினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் இலக்கியன், கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

சமத்துவ கழகம் கட்சியின் அன்னூர் தாலுகா செயலாளர் ராஜன் (வயது 35) மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து மொட்டை போட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

இதே போல நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் கவுன்சிலர் முகமது சலீம் தலைமை தாங்கினார். இதில் கோவை மத்திய மாவட்ட பொதுச் செயலாளர் அப்பாஸ், மன்சூர் அலி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்