குறைதீர்க்கும் கூட்டத்தில் மதுக்கடையை மூடக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

குறைதீர்க்கும் கூட்டத்தில், மதுக்கடையை மூடக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

Update: 2017-09-04 23:00 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். மாவட்டம் முழுவதும் இருந்து வந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

கன்னிவாடி அருகே உள்ள கோனூர், குட்டத்துப்பட்டி, குஞ்சனம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 50–க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘கோனூரில் மதுக்கடை திறக்கப்பட்டு உள்ளது. இதனால், கோனூர், குட்டத்துப்பட்டி, குஞ்சனம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கடுமையான பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக, பெண்கள், மாணவ, மாணவிகள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே, அந்த மதுக்கடையை உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என தெரிவித்து இருந்தனர்.

இதே போல திண்டுக்கல் மாவட்ட சுருட்டு தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் கலெக்டரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், ‘புகையிலை பொருட்களுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு இருப்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், கையினால் சுற்றப்படும் சுருட்டுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் சுருட்டு விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இது விற்பனையை கடுமையாக பாதிக்கும். இது எங்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிடும். எனவே, கையால் சுருட்டப்படும் சுருட்டுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கருப்பணகவுண்டன்புதூரை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘எங்கள் பகுதிக்கு முறையாக தண்ணீர் வருவதில்லை. இது குறித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்து இருந்தனர்.

இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மொத்தம் 281 மனுக்கள் பெறப்பட்டன. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவு பிறப்பித்தார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அருண்சத்யா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) இந்திரவள்ளி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்