சென்னை புறநகரில் ‘நீட்’ தேர்வை எதிர்த்து பல்வேறு தரப்பினர் போராட்டம்

சென்னை புறநகரில் ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-04 22:45 GMT

ராயபுரம்,

‘நீட்’ தேர்வு முறையினால் தனது மருத்துவ கனவு தகர்ந்து போனதால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு இடங்களில் போராட்டம் வலுத்து வருகிறது.

அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம் எனக்கூறியும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபடுவதற்காக கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தனர்.

அப்போது கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்டிரல் நோக்கி வந்த மின்சார ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினார்கள். இதில் ஈடுபட்ட 100–க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தாம்பரம் சண்முகம் சாலையில் சமூக நீதி மாணவர்கள் இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இயக்கத்தின் பொருளாளர் தமிம் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 150–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

தாம்பரம் பஸ் நிலையம் அருகில் இந்திய தேசிய லீக் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100–க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.பி.டிஐ. கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அவர்கள் ரெயில் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் ஓட்டேரி பாலம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.பி.டி.ஐ. கட்சியினரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்