கோவில் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து பெண் பலி ஸ்தபதிகள் 2 பேர் கைது

எண்ணூரில் கோவில் கும்பாபிஷேகத்தின்போது அதன் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக ஸ்தபதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-09-04 23:00 GMT

திருவொற்றியூர்,

திருவொற்றியூரை அடுத்த எண்ணூர் உலகநாதபுரம் பகுதியில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் சமீபத்தில் முடிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதனால் கோவிலுக்குள் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்றனர். அப்போது கோவிலின் உள்ளே மேற்கூரையின் சிமெண்டு பூச்சு திடீரென பெயர்ந்து பக்தர்கள் மீது விழுந்தது. இதன் இடிபாடுகளிடையே 8 பெண்கள் சிக்கிக்கொண்டனர்.

அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி திருவொற்றியூர் சத்தியவாணி முத்து நகரை சேர்ந்த சுப்பையா என்பவரது மனைவி கனகா(வயது47) என்பவர் உயிரிழந்தார். மேலும், படுகாயம் அடைந்த லலிதா(44), ஷாலினி(30), பத்மினி(35), காயத்ரி(34), சங்கீதா(35), உஷா(45), பானு(65) ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலை கட்டிய ஸ்தபதிகள் சிதம்பரத்தை சேர்ந்த சத்தியராஜ்(31) செல்வராஜ் (29) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

* கிண்டி ஈக்காட்டுத்தாங்கலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் கால்டாக்சி நிறுவனத்தின் டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

* திருவொற்றியூரில் முன்விரோதம் காரணமாக பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரகாஷை(21) கத்தியால் குத்திய நரேஷ்(25), கிஷோர்(23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

* வியாசர்பாடி அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு 42 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* கொருக்குப்பேட்டையில் மின்சார ரெயிலில் சென்ற சிவகுமார் என்பவரிடம் செல்போன் திருடிய அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்த மணிகண்டன்(22) கைது செய்யப்பட்டார்.

* ராயபுரம் ஆதாம் தெருவில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தெருக்களில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* கே.கே.நகர் சண்முகம் சாலையை சேர்ந்த ஆசிரியை மல்லிகாவிடம்(45) தங்க சங்கிலி என நினைத்து கவரிங் நகையை பறித்து சென்ற விக்னேஷ்(19) என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றொருவரை தேடிவருகின்றனர்.

* அயானவரத்தை சேர்ந்த ராஜ் என்பவரின் மகன் கெவின்ராஜ்(15) கடந்த 29–ந்தேதி பெசன்ட் நகர் கடலில் குளித்தபோது அலையால் இழுத்து செல்லப்பட்டு மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

* தேனாம்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்த தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த கனிமொழியிடம்(58) 5 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

மேலும் செய்திகள்