நீல திமிங்கல விளையாட்டை சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை

நீல திமிங்கல விளையாட்டை சமூக வலைத்தளங்கள் மூலமாக பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை முதன்மைச் செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-09-04 23:15 GMT

மதுரை,

‘புளூ வேல்’ எனப்படும் நீல திமிங்கல விளையாட்டால் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் பிரச்சினை குறித்து மதுரை ஐகோர்ட்டு தானாக முன்வந்து (சூ–மோட்டோ) வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடர்பான உத்தரவில், ‘தற்போதைய நிலையில் இந்த விளையாட்டை தடுக்க போதிய அமைப்பு முறை இல்லை. இதனால் பொதுமக்களின் நலனை கருதி கோர்ட்டு இந்த பிரச்சினையில் தலையிடுகிறது. ஐகோர்ட்டு இதனை தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்கிறது’ என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீல திமிங்கல விளையாட்டை முழுமையாக தடை செய்வது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, அரசு வக்கீல், ‘‘நீல திமிங்கல விளையாட்டு முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் அந்த விளையாட்டை இளைஞர்கள் யாராவது விளையாடி வருகிறார்களா, அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்றும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

அதற்கு வக்கீல்கள் சிலர், ‘‘நீல திமிங்கல விளையாட்டு தடை செய்யப்படுவதற்கு முன்பு இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த பலர், தங்களது நண்பர்களின் பேஸ்புக், வாட்ஸ்–அப் போன்ற சமூக வலைத்தளங்களிலும், இ–மெயில் மூலமாகவும் அந்த விளையாட்டை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்’’ என்றனர்.

இதையடுத்து, நீல திமிங்கல விளையாட்டை பேஸ்புக், இ–மெயில், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், சென்னை ஐ.ஐ.டியின் இயக்குனர், சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அரவிந்தன், லாவண்யா ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்க்கவும், பேஸ்புக், வாட்ஸ்அப், இ–மெயில் போன்றவற்றில் நீல திமிங்கலம் விளையாட்டை பகிர முடியாத அளவுக்கு நிரந்தரமாக நீக்க வழியுள்ளதா என்பது குறித்து மத்திய தகவல்–தொழில்நுட்பத்துறையிடம் விளக்கம் பெற்று தெரிவிக்கவும், மத்திய அரசு வக்கீலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகிற 7–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்