பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி; 2 பேர் படுகாயம்

பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-09-04 22:45 GMT
செங்குன்றம்,

மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த காட்டாவூர் இருளர் காலனியை சேர்ந்தவர் பார்வதி(வயது 55). நேற்று முன்தினம் இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த இவரை அதே பகுதியை சேர்ந்த உறவினர் விஜயகுமார் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அவர்களுடன் பார்வதியின் மகளும் சென்றார்.
சின்னக்காவனம் அருகே பழவேற்காடு சாலையில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று திடீரென இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பார்வதி உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த பார்வதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அவருடைய மகள் மற்றும் உறவினர் விஜயகுமார் இருவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள், உடனடியாக ‘108’ ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பொன்னேரி-பழவேற்காடு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்குள் ஆம்புலன்ஸ் வந்து விட்டது.

இதையடுத்து படுகாயம் அடைந்த விஜயகுமார் உள்பட 2 பேரையும் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்