மதுபோதையில் தகராறு லாரி கிளனர் அடித்துக்கொலை ஒருவர் கைது

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக லாரி கிளனர் உருட்டுகட்டையால் அடித்துக்கொல்லப்பட்டார்.;

Update:2017-09-05 03:45 IST
பெரம்பூர்,

இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வரும் போலீசார் மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

வியாசர்பாடி அன்னை சத்தியா நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் கலைவாணன் (வயது 23). இவர் லாரி கிளனராக வேலை செய்து வந்தார்.
கலைவாணன் நேற்றுமுன்தினம் இரவு மது அருந்துவதற்காக வியாசர்பாடியில் உள்ள அரசு மதுக்கடைக்கு சென்றார்.

அப்போது, கலைவாணனுக்கு தெரிந்த டிரைவர் வியாசர்பாடி பி.வி.காலனி 19-வது தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (39) என்பவர் அதே மதுக்கடைக்கு வந்தார்.

அங்கு அவர்கள் இருவரும் ஒன்றாக மது அருந்தினர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாய்தகராறு ஏற்பட்டது. பின்னர் தகராறு முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பு ஆனது.

அப்போது கலைவாணன் தாக்கியதில் கிருஷ்ணமூர்த்திக்கு தலையில் காயம் எற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
வீட்டுக்கு வந்த பிறகும், கடும் ஆத்திரத்தில் இருந்த கிருஷ்ணமூர்த்தி தனது நண்பர் ராஜீ(28) என்பவரை அழைத்துக் கொண்டு இரவு 11 மணிக்கு கலைவாணன் வீட்டுக்கு சென்றார்.

அப்போது கலைவாணன் வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். கிருஷ்ணமூர்த்தி, ராஜீ இருவரும் கலைவாணனை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர். அவர் வலியில் அலறி துடித்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை கண்டதும் கிருஷ்ணமூர்த்தி, ராஜீ இருவரும் உடனே அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

தலையில் பலத்த காயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த கலைவாணனை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி கலைவாணன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்கு பதிவுசெய்து தப்பியோடிய கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தலைமறைவாகி உள்ள கிருஷ்ணமூர்த்தியின் நண்பர் ராஜீவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்