பெங்களூருவில் மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் நிரந்தர தீர்வுக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்படும்
பெங்களூருவில் மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் நிரந்தர தீர்வுக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
பெங்களூரு,
பெங்களூருவில் மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் நிரந்தர தீர்வுக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–
ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்படும்பெங்களூருவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எச்.எஸ்.ஆர்.லே–அவுட், கோமரங்களா உள்ளிட்ட சில பகுதிகளில் மழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்படும் அந்த பகுதிகளில் நிரந்தர தீர்வு காண ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்படும். அந்த பகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.
சாந்திநகரில் உள்ள பி.எம்.டி.சி. பஸ் பணிமனையில் மழைநீர் அதிகளவில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அங்கு ஒரு கால்வாய் அமைக்கப்படும். இதற்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்படும். எச்.எஸ்.ஆர்.லே–அவுட்டில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும். எச்.எஸ்.ஆர்.–லே–அவுட்டுக்கு வரும் நீர் மடிவாளா ஏரிக்கு செல்கிறது. அந்த ஏரியை வனத்துறை நிர்வகித்து வருகிறது. அதில் கழிவுநீர் கலக்க விடுவது இல்லை.
குப்பைகளை கொட்டியுள்ளனர்எனவே, எச்.எஸ்.ஆர்.லே–அவுட்டில் சேரும் நீர், வேறு இடத்திற்கு கொண்டு செல்ல தேவையான வசதிகள் செய்யப்படும். கோரமங்களா பகுதியில் ஓடும் சாக்கடை கால்வாயில் தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குப்பைகளை கொட்டியுள்ளனர். இதனால் மழைநீர் சரியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கால்வாயில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். குப்பையை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
அடுத்த 4 நாட்களில் நகரில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதனால் சாலைகளில் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். சில பகுதிகளில் பாதாள சாக்கடை குழிகளின் மூடிகள் திறந்திருக்கும் நிலையில் இருக்க்கின்றன. அடுத்து வரும் மழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மாநகராட்சி தயாராக உள்ளது. கட்டுப்பாட்டு அறை, அவசர மீட்பு குழு, கர்நாடக ஆயுதப்படி போலீஸ், இயற்கை பேரிடர் மீட்பு குழு, வனத்துறை ஊழியர்கள் குழு ஆகியவை தயார் நிலையில் உள்ளன.
பாரபட்சம் பார்ப்பது இல்லைசில பகுதிகளில் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அதன் உரிமையாளர்களுக்கு வேறு இடத்தில் வீட்டுமனைகள் வழங்கப்படுகின்றன. நகரில் கால்வாய்கள் மீது கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்படும். இதில் ஏழை–பணக்காரர் என்று பாரபட்சம் பார்ப்பது இல்லை. நடிகர் தர்ஷன் வீட்டை இடிப்பது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளது.
யாராக இருந்தாலும் சரி, விதிமுறைகளை மீறி கட்டியுள்ள கட்டிடங்களை இடித்து தள்ளும்படி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். கால்வாய்களை மேம்படுத்தும் பணிகளுக்கு ரூ.800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த விஷயத்தில் அனைத்து சட்ட பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிட்டன.
இவ்வாறு கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
கூட்டணி தொடரும்பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தல் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “பெங்களூரு மாநகராட்சியில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இடையே கூட்டணி உள்ளது. இந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜனதா தளம்(எஸ்) கட்சி சொல்லவில்லை. அதனால் வரும் ஆண்டிலும் மேயர் தேர்தலில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி தொடரும்“ என்றார்.