சிக்கமகளூரு டவுனில், பயன்படாமல் இருந்த போலீஸ் நிலைய கட்டிடத்தில் உதவும் கரங்கள்’ திட்டம் தொடக்கம்
சிக்கமகளூரு டவுனில் 2 ஆண்டுகளாக பயன்படாமல் இருந்த போலீஸ் நிலைய கட்டிடத்தில் ‘உதவும் கரங்கள்’ திட்டத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை தொடங்கி வைத்தார்.
சிக்கமகளூரு,
சிக்கமகளூரு டவுனில் 2 ஆண்டுகளாக பயன்படாமல் இருந்த போலீஸ் நிலைய கட்டிடத்தில் ‘உதவும் கரங்கள்’ திட்டத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை தொடங்கி வைத்தார்.
உதவும் கரங்கள் திட்டம்சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் துறை சார்பில் சிக்கமகளூரு டவுன் எம்.ஜி.ரோடு பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பயன்படாமல் இருந்த போலீஸ் நிலைய கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. அங்கு பொதுமக்கள் தங்களது தேவைக்கு அதிகமாக வைத்துள்ள பொருட்களையும், உபயோகப்படுத்தாமல் வைத்துள்ள பொருட்களையும் கொடுக்கலாம். அந்த பொருட்களை தன்னார்வலர்கள் சேகரித்து, ஏழை–எளிய மக்களுக்கு கொடுக்கும் வகையில் இந்த புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ‘உதவும் கரங்கள்’ என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த ‘உதவும் கரங்கள்’ திட்டத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
உதவும் கரங்கள் திட்டம் என்பது நாம் பயன்படுத்தாத, நமக்கு தேவையில்லாத பொருட்களை பிறருக்கு பயன்படும் வகையில் விட்டுச் செல்வதும், தேவைப்படுபவர்கள் தேவையானவற்றை எடுத்துச் செல்வதும் ஆகும்.
உபயோகம் இல்லாத பொருட்கள்எனவே, இந்த ‘உதவும் கரங்கள்’ திட்டத்தில் மக்கள் தமக்கு உபயோகம் இல்லாத துணிகள், புத்தகங்கள், இதர பொருட்களை கொடுக்கலாம். அதனை தேவைப்படுபவர்கள் யார் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். மேலும் தன்னார்வலர்களும் சேகரித்து ஏழை–எளிய மக்களுக்கு வழங்குவார்கள். மாநிலத்தில் முதன்முறையாக சிக்கமகளூரு மாவட்டத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.