வெம்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி திடீர் முற்றுகை போராட்டம்

வெம்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-03 23:00 GMT

வெம்பாக்கம்,

வெம்பாக்கம் அருகே மாமண்டூரில் இருந்து சுருட்டல் செல்லும் சாலையில் கடந்த 1–ந் தேதி புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை மாமண்டூர் ஊராட்சி முன்னாள் தலைவர் டி.ராஜி தலைமையில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும், செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், வெம்பாக்கம் தாசில்தார் பெருமாள், தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதி மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடமும், பொதுமக்களிடமும் அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். அப்போது போலீசாரும், அதிகாரிகளும், சுருட்டல் சாலையில் புதிதாக தொடங்கப்பட்ட டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து பொதுமக்களும், பெண்களும் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்