அணைகளின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு குறுகிய கால பயிர் சாகுபடிக்கு முக்கியத்துவம்

அணைகளின் நீர் இருப்பை கருதி குறுகிய கால பயிர் சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளதாக கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்தார்.

Update: 2017-09-03 22:30 GMT

தேனி,

முல்லைப்பெரியாறு அணையின் மூலம் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறும். இதற்காக ஜூன் மாதம் 1–ந்தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், இந்த ஆண்டு போதிய மழைப் பொழிவு இல்லாததால் இதுவரை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

அதேபோல், மஞ்சளாறு, சோத்துப்பாறை, வைகை அணைகளில் இருந்தும் பாசனத்துக்காக இன்னும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த அணைகளிலும் நீர்மட்டம் குறைவாகவே உள்ளது. நெல் சாகுபடி மேற்கொண்டால் அதற்கு பாய்ச்சும் அளவுக்கு அணையில் போதிய நீர் இருப்பு இல்லை. இனி வரும் நாட்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்தால் மட்டுமே நெல் சாகுபடி பணிகளை நம்பிக்கையோடு மேற்கொள்ளும் நிலைமை உள்ளது.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளை பொறுத்தவரை ஜூன், ஜூலை மாதங்களில் முதல் போக நெல் சாகுபடி பணிகள் தொடங்கும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் அறுவடை பணிகள் தொடங்கும். பின்னர், டிசம்பர் மாதம் இரண்டாம் போக நெல் சாகுபடி பணிகள் தொடங்கி மார்ச் மாதத்தில் அறுவடை பணிகள் நடக்கும்.

இந்த ஆண்டு பருவமழை காலம் தாழ்த்தியதால் விவசாய பணிகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்திடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–

முல்லைப்பெரியாறு அணை மூலம் முதல்போக பாசன வசதி பெறும் நிலங்களில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது. தற்போது காலம் தாழ்த்தி முதல்போக சாகுபடியை தொடங்கினால், 2–ம் போகம் சாகுபடியிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மழை கைகொடுத்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தால் தான், விவசாய பணிகளுக்கும், அடுத்து வரும் கோடை கால குடிநீர் தேவைக்குமான தண்ணீர் கிடைக்கும். எனவே, விவசாயிகள் குறுகிய கால பயிர் சாகுபடியில் ஈடுபடலாம். பயறு வகைகள், சிறுதானிய வகைகள் சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். தொடர்ந்து நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பினால், குறுகிய கால பயிர் சாகுபடியில் மகசூல் பெறுவதோடு, அதன்பிறகு நெல் சாகுபடிகளையும் நம்பிக்கையோடு மேற்கொள்ளலாம். எனவே, தற்போது பெய்து வரும் மழையை கருத்தில் கொண்டு விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில் குறுகிய கால பயிர் சாகுபடியில் ஈடுபடலாம். இதற்கு தேவையான விதைகள் வேளாண்மைத்துறை மூலம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்