தமிழகத்தில் தற்போது தேர்தல் வந்தால் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும் திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு

தமிழகத்தில் தற்போது எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும் என்று திண்டுக்கல் ஐ.லியோனி கூறினார்.

Update: 2017-09-03 20:30 GMT

உடன்குடி,

தமிழகத்தில் தற்போது எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும் என்று திண்டுக்கல் ஐ.லியோனி கூறினார்.

பொதுக்கூட்டம்

உடன்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பரமன்குறிச்சி மெயின் பஜாரில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94–வது பிறந்த நாள் விழா மற்றும் சட்ட மன்ற வைர விழா பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வி.பி.ராமநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர் டி.பி.பாலசிங், பொதுக்குழு உறுப்பினர் முத்துசெல்வன், உடன்குடி நகர கழக செயலாளர் ஜான்பாஸ்கர், எஸ்.ராமச்சந்திரன், பேச்சிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி எஸ்.மதன்ராஜ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் திண்டுக்கல் ஜ.லியோனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

மாணவி மரணம்

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;–

நம்பிக்கை தான் வாழ்க்கை. ஆனால் தற்போது நடந்து வரும் எடப்பாடி அரசு எத்தனை நாள் ஓடும் எப்படி செயல்படும் என்பது முதல்வருக்கும் தெரியாது, துணை முதல்வருக்கும் தெரியாது, அமைச்சர்களுக்கும் தெரியாது.

ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்காக மத்திய அரசு என்ன சட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்ப்பதும் இல்லை, கால அவகாசம் கேட்பதும் இல்லை. அதனால் தான் மாணவி அனிதா மரணமடைந்து விட்டார். இது சாதாரண மரணம் இல்லை. தமிழகத்தில் மீண்டும் ஒரு போராட்டம் உதயமாவதற்கு வித்திட்ட விதையாகும்.

மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் அனைத்து குளங்களையும் தூர்வார வேண்டும் என்று தி.மு.க.வினருக்கு உத்தரவிட்டார். அவரும் குளத்தில் இறங்கி தூர்வாரினார். அரசு செய்ய வேண்டிய பணியை தி.மு.க.வினர் செய்தனர். இதனால் தற்போது தொடங்கியுள்ள பருவ மழையில் ஏராளமான குளங்கள் நிறைந்து விட்டன. விவசாயிகளின் மனம் குளிர்ந்து விட்டது.

இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் பஞ்சாயத்து தேர்தலாக இருந்தாலும் சரி, சட்ட மன்ற பொதுத் தேர்தலாக இருந்தாலும் சரி தி.மு.க. கூட்டணி தான் அமோக வெற்றி பெரும். இவ்வாறு திண்டுக்கல் ஜ.லியோனி பேசினார்.

யார்–யார்?

இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாநில மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் வெற்றிவேல், மாவட்ட துணைச் செயலாளர் சு.ஆறுமுக பெருமாள், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.கே.பூபதி, தலைமை கழக பேச்சாளர் உடன்குடி தனபால், நகர கழக பொருளாளர் தங்கம், வி.பி.சாரதி, மந்திரமூர்த்தி, வக்கீல் பிரிவு சிவராஜ் சாக்ரடீஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பரமன்குறிச்சி ஊராட்சி கழக செயலாளர் இளங்கோ செய்திருந்தார்.

மேலும் செய்திகள்