தூத்துக்குடி மாநகராட்சியில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும் கீதாஜீவன் எம்.எல்.ஏ. அறிக்கை

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அனைத்து கழிவுநீர் கால்வாய்களையும் தூர்வார வேண்டும் என்று கீதாஜீவன் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2017-09-03 21:15 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அனைத்து கழிவுநீர் கால்வாய்களையும் தூர்வார வேண்டும் என்று கீதாஜீவன் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

4–வது குடிநீர் குழாய் திட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி தொடங்கப்பட்ட போது, மாநகராட்சியோடு இணைந்த பஞ்சாயத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக ரூ.282 கோடியில் 4–வது குடிநீர் குழாய் திட்டம் கடந்த தி.மு.க. ஆட்சியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பின்னர், அ.தி.மு.க. ஆட்சியில் அமலுக்கு வந்தது.

4–வது குடிநீர் குழாய் திட்டத்திற்கான ஒப்பந்த பணியை எடுத்த நிறுவனம், பணியை காலதாமதம் செய்ததோடு தரமற்ற குடிநீர் குழாய்களை பதித்தும், குடிநீர் குழாய்களை ஏற்ற, இறக்கமாக பதித்தும், பாதி தெருக்களில் குடிநீர் குழாய் பதிக்காமல் விட்டு பல முறைகேடுகளை செய்துள்ளனர்.

இதனால் 4–வது குடிநீர் குழாய் திட்ட பணிகள் முடியும் நிலையில் இருந்தும் சோதனை ஓட்டம் நடத்தும் நேரத்தில், அனைத்து பகுதிகளுக்கும் முறையாக குடிநீர் வரவில்லை. மேலும் குடிநீரில் கல், மண், துணி போன்றவை வந்ததால் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது.

நிதி ஒதுக்கீடு

தற்போது குடிநீர் வினியோகம் செய்யப்படும் நேரம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படுவது இல்லை. ஒருசில இடங்களில் சரிவர தண்ணீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை. மாநகராட்சியோடு இணைந்த பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றியும், மக்களுக்கு வீட்டு இணைப்பு வழங்க மாநகராட்சி எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

தெருக்களில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு நிதி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்ததன் அடிப்படையில் என்னுடைய (கீதாஜீவன் எம்.எல்.ஏ) சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியே 40 லட்சம் ஒதுக்கியும் பணிகள் நடக்கவில்லை.

போராட்டம்

தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக பாதாள சாக்கடை திட்டமும் முடக்கி வைக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் அனைத்தும் மண்மேடாகி, கழிவுநீர் செல்லாத நிலை உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் தூர் வாரப்பட வேண்டும் என்ற மாநகராட்சி ஆணையரிடம் பல முறை கோரிக்கை வைத்தும், எந்த பணிகளும் ஆரம்பிக்கப்படவில்லை. மழைக் காலம் நெருங்கும் இந்த நேரத்தில் உடனடியாக கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தையும் தூர்வார மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லை என்றால், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் உத்தரவு பெற்று பொதுமக்களை திரட்டி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்