திருச்செந்தூரில் தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்

திருச்செந்தூரில் தி.மு.க. சார்பில் நடந்த மவுன ஊர்வலத்தில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

Update: 2017-09-03 22:00 GMT

திருச்செந்தூர்,

திருச்செந்தூரில் தி.மு.க. சார்பில் நடந்த மவுன ஊர்வலத்தில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

அனிதா மரணம்

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா பிளஸ்–2 பொதுத்தேர்வில் 1,176 மதிப்பெண்களும், 196.5 சதவீதம் கட்ஆப் பெற்றிருந்தார். மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் மருத்துவ கனவை இழந்த அவர் சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

மத்திய, மாநில அரசுகளின் முறையற்ற ஏமாற்றுத்தனமான நடவடிக்கை தான் அனிதாவின் உயிரை பறித்ததாக கூறி, தமிழகம் முழுவதும் எதிர் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

ஊர்வலம்

இதே போல தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், அனைத்து அரசியல் கட்சியினர் பங்கேற்ற மவுன ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. திருச்செந்தூரில் நடந்த அந்த ஊர்வலத்துக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்த ஊர்வலம் வ.உ.சி. திடலில் தொடங்கி, நான்கு ரதவீதிகள், காமராசர் சாலை வழியாக பகத்சிங் பஸ் நிலையத்தில் நிறைவு பெற்றது.

யார்–யார்?

ஊர்வலத்தில் திண்டுக்கல் ஐ.லியோனி, மாநில மருத்துவரணி துணை அமைப்பாளர் வெற்றிவேல், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பாலசிங், ரவி, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய துணை செயலாளர் மகராஜன், முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், நகரச்செயலாளர்கள் மந்திரமூர்த்தி, ஜான்பாஸ்கர், ராமஜெயம், காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்ட பொதுச்செயலாளர் பேச்சியம்மாள், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன், மாவட்ட பொருளாளர் பரமசிவன், ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், தமிழ்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டலச்செயலாளர் தமிழினியன், ஒன்றிய செயலாளர் சங்கத்தமிழன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் மஹ்மதுல் ஹசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் காமராசு, நகர யாதவ வியாபாரிகள் சங்க தலைவர் கணேசன், நாடார் வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வகுமார், தே.மு.தி.க. நகர செயலாளர் பேச்சிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தை தொடர்ந்து, இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்