‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி மாவட்டத்தில் 2–வது நாளாக போராட்டம்

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி விழுப்புரம் மாவட்டத்தில் 2–வது நாளாக நேற்று போராட்டம் நடந்தது.

Update: 2017-09-03 22:15 GMT

விழுப்புரம்,

‘நீட்’ தேர்வினால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், இதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், ‘நீட்’ தேர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இளைஞர்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள் நடத்திய நிலையில் நேற்றும் 2–வது நாளாக போராட்டம் நடந்தது.

விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகில் தி.மு.க. ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சுதாகர் தலைமையில் அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் இந்திய குடியரசு கட்சி மாநில செயலாளர் நாகமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ், தி.மு.க. கிளை செயலாளர் ஜெயபால், காங்கிரஸ் கட்சி கிளை செயலாளர் பன்னீர்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிளை செயலாளர் ஜெயச்சந்திரன், ஒரத்தூர் ஊராட்சி செயலாளர் வேலு உள்பட பலர் கலந்துகொண்டு ‘நீட்’ தேர்வை உடனே ரத்து செய்ய வலியுறுத்தியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் கோ‌ஷம் எழுப்பினார்கள்.

இதேபோல் கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் வகாப் தலைமையிலும், திண்டிவனம் காந்தியார் திடலில் நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற தொகுதி செயலாளர் ராஜமகேஷ் தலைமையிலும், கண்டாச்சிமங்கலம் கூட்டுசாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை செயலாளர் பரதன் தலைமையிலும், திருநாவலூர் அருகே கெடிலம் பஸ் நிறுத்தம் அருகில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையிலும் அந்தந்த கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்